Covai BJP: கோவையில் பிரதமர் மோடிக்கு சிறுவர்களை கொண்டு வரவேற்பு அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பிரதமர் மோடி:
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக இந்த முறை தமிழ்நாட்டில் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என, பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதனை பறைசாற்றும் விதமாகவே நடப்பாண்டில் ஏற்கனவே 5 முறை தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி நேற்று 6வது முறையாக வருகை தந்தார். கோவையில் நடபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, வாகன பேரணியில் ஈடுபட்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த மக்கள், பூக்களை தூவியும், வரவேற்பு பதாகைகளை கைகளில் ஏந்தியும் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அவர் காரில் இருந்து எழுந்து நின்றபடி மக்களை நோக்கி கையசைத்துச் சென்றார்.
சிறுவர்களுக்கு ஹனுமான் வேடம்:
பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க பாஜக சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில், சிறுவர்களுக்கு ராமன், சீதை மற்றும் ஹனுமன் வேடமணிந்து சாலையோரம், நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு அவர்கள் அனைவருக்கும் பாஜக சின்னம் பொருந்திய அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு இருந்தது, சில சிறுவர்கள் மோடியின் முக உருவம் கொண்ட முகமூடிகளையும் கையில் வைத்திருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியை வரவேற்க அரசுப் பள்ளி மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் விதிமீறல்களா?
தேர்தல் தொடர்பான பரப்புரை, விளம்பரங்கள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் சிறுவர்களை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. அந்த விதிகளை பாஜக முற்றிலும் மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை எப்படி ஒரு கட்சியினர் பிரதமரின் பேரணிக்கு அழைத்துச் செல்ல முடியும் எனவும் பலர் கேள்வி எழுப்புள்ளனர். அதோடு, அரசியல் கட்சி நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல அனுமதித்தது யார் என, தமிழக பள்ளிக்கல்வித்துறையயும் சிலர் சாடி வருகின்றனர். இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து, குழந்தைகளை பரப்புரையில் ஈடுபடுத்தும் கட்சிகளின் மீது தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.