கோவை மாநகராட்சி துடியலூர் பகுதியில் உள்ள புதுமுத்து நகர் நரிக்குறவர் காலனியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நரிக்குறவர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 60 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்சார வசதி மற்றும் பொது குடிநீர் குழாய் பற்றாக்குறையால் நாள்தோறும் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் மின்சார வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, கோவை மாநகராட்சி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் சமூக நீதிக் கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் நரிக்குறவர் சமூக மக்களுடன் வந்து மனு அளித்தனர்.


அப்புகாரின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று நரிக்குறவர்கள் மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கண்டறிந்தார். பின்னர் தெருவிளக்கு மற்றும் பொது குடிநீர் குழாய் அமைத்துத் தர மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் இன்று அப்பகுதி மக்களுக்கு தெருவிளக்கு மற்றும் பொது குடிநீர் குழாய் அமைத்து தரப்பட்டுள்ளது. இதனால் 30 ஆண்டுகளாக சிரமப்பட்டு வந்த மக்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மேயர் கல்பனா எடுத்த நடவடிக்கை காரணமாக தீர்வு கிடைத்துள்ளது.




இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் சமூக மக்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் மேயர் கல்பனா ஆனந்த்குமாரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது நரிக்குறவர் மக்கள் அவர்களின் பாரம்பரிய மரியாதையுடன், பாசி மணி மாலையை அணிவித்து நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.


இது குறித்து சமூக நீதிக் கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், “நரிக்குறவர் சமூக மக்களின் இடம் அதிமுகவை சேர்ந்த ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றோம். அப்பகுதி மக்கள் வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தரப்பட்டு இருந்தாலும், தெரு விளக்கு வசதி செய்யப்படாததால் இரவு நேரங்களில் இருளில் தவித்து வந்தனர். போதிய பொது குடிநீர் குழாய், கழிவறை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர்.


கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரை சந்தித்து புகார் மனு அளித்தோம். அதன்பேரில் தெரு விளக்கு வசதி, பொது குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. கழிவறை மற்றும் சாலை வசதி செய்து தருவதாக மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. நரிக்குறவர்களின் ஊசி பாசி விற்பனை செய்ய மாநகராட்சி கடைகளில் ஒன்றை ஒதுக்கி தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். அது தொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்” எனத் தெரிவித்தார். கோவை மாநகராட்சி நடவடிக்கையால் நரிக்குறவர் சமூக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண