தொடர் விடுமுறையால் கோவையில் இருந்து வெளியூர் செல்ல அதிகளவு பயணிகள் குவிந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சனி, ஞாயிறு வார விடுமுறை நாள் மற்றும் திங்கட்கிழமை சுதந்திர தின விழா அரசு விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வந்து கோவையில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அதேபோல அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் நபர்கள் என வெளியூரிலிருந்து வந்து பணியாற்றும் பலரும் மூன்று நாட்கள் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதில் விருப்பம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலையங்களுக்கு அதிகளவிலான பயணிகள் வந்தனர். அங்கிருந்து அரசுப் பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர். இதையொட்டி கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையிலிருந்து மட்டும் சுமார் நாற்பது சிறப்பு பேருந்துகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு போதுமான பேருந்து வசதிகள் இருப்பதால், தென் மாவட்டங்களான திருச்சி, தேனி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு பெரும்பாலான சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் அதிகளவில் வருவதை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கும் வகையில் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. சாதாரண காலங்களில் இருப்பதை விட ஆம்னி பேருந்து கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னைக்கு வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் இன்று 2,000 முதல் 3,000 வரை விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது.
காந்திபுரம் பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனிடையே காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆம்னி பேருந்துகளில் பயணித்த பயணிகளிடம் பஸ் கட்டணம் எவ்வளவு? கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும் பேருந்து நடத்துநர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ச்சியாக ஆம்னி பேருந்துகள் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதோடு, பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க போதிய அளவு கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்