கேரள மாநிலத்தை ஓட்டியுள்ள கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில், அம்மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு சேர்ந்தவர் கிருஷ்ணகுமாரி. 32 வயதான இவர் கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பொறியியல் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கிருஷ்ணகுமாரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகுமாரியின் பெற்றோர் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் மர்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து, கொல்லங்கோடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கிருஷ்ணகுமாரியின் குடும்பத்தினர் கூறுகையில் ”கிருஷ்ணகுமாரி எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்வதில் மேம்பாடு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்ட பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் அவரது ஆராய்ச்சி படிப்புக்கான வழிகாட்டிகளான பேராசிரியர்கள் சிந்து மற்றும் ராதிகா ஆகியோர் உளவியல் ரீதியாக துன்புறுத்தினர். கிருஷ்ணகுமாரியை தொடர்ந்து இழிவுபடுத்தி வந்துள்ளனர். ஆராய்ச்சி கட்டுரைகளை முறையாக சமர்ப்பிக்கவில்லை என கடுமையாக திட்டியுள்ளனர். ஆராய்ச்சி செய்வதற்கான உதவி தொகையும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல்கலை கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 20 ஆண்டுகள் ஆனாலும் ஆராய்ச்சிப் படிப்பை உன்னால் முடிக்க முடியாது தற்கொலை செய்து கொள் என பேராசிரியர் ராதிகா கூறி அச்சுறுத்தியுள்ளார். 5 ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்த ஆராய்ச்சி படிப்பை முடிக்க முடியாது என்ற அச்சத்தில் மனமுடைந்த கிருஷ்ணகுமாரி தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகுமாரி தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் ஆராய்ச்சி வழிகாட்டியான பேராசிரியர் ராதிகா கூறுகையில், ”கல்லூரியில் கிருஷ்ணகுமாரிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. யாரும் மன ரீதியில் எந்த விதத் தொல்லையும் தரவில்லை. ஆய்வுக் கட்டுரையை திருத்த வேண்டும் என்று மட்டுமே தான் பரிந்துரைத்தோம். கிருஷ்ணகுமாரியின் பெற்றோரது குற்றச்சாட்டுகளை மறுக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050