கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பேருந்துகள் : நோயாளிகளின் உயிர்காக்க தன்னார்வலர்கள் உதவி..

ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைக்காக காத்திருக்கும் நோயாளிகளில், ஒரு பேருந்தில் 12 பேர் வீதம் 24 பேருக்கு ஆக்சிஜன் வழங்க முடியும்.

Continues below advertisement

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்புகள் உறுதியாகி வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேசமயம் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பால், கோவையில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுக்கு ஆக்சிஜன் வசதி மிகவும் அவசியமாக உள்ளது. இதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பி விட்டன. இதனால் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் அலைகழிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

Continues below advertisement

இதனிடையே கொரோனா நோயாளிகளுக்கு தாமதமின்றி ஆக்சிஜன் கிடைக்க வசதியாக கோவை அரசு மருத்துவமனையில் 15 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய ‘ஜீரோ டீலே’ என்ற சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. நோயாளிகளை பரிசோதித்து ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள், சாதாரண படுக்கை தேவை உள்ள நோயாளிகள் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டில் உள்ள அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் கான்சன்ரேட்டர் என்ற கருவி மூலம், வெளிக்காற்றை உள்வாங்கி நைட்ரஜனை பிரித்து நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.  இதனால் நோயாளிகள் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலையும், சிகிச்சையின்றி உயிரிழக்கும் நிலையும் தவிர்க்கப்படும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் எதிர்பார்த்தனர்.

ஜீரோ டீலே வார்டில் உள்ள 15 படுக்கைகளும் நிரம்பியதை அடுத்து, 10 பேருக்கு இருக்கையில் அமர வைத்து ஆக்சிஜன் வழங்கப்பட்டது. தொடர்ந்து நோயாளிகளின் வந்ததால் படுக்கை வசதியின்றி, அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்காக, கே.ஜி.ஐ.எஸ்.எல் நிறுவனம் மற்றும் தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஆகியவை இரண்டு ஆக்சிஜன் பேருந்துகளை வழங்கியுள்ளனர். ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைக்காக காத்திருக்கும் நோயாளிகளில், ஒரு பேருந்தில் 12 பேர் வீதம் 24 பேருக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். இந்த பேருந்துகளில் உள்ள ஆக்சிஜன் குறையும் போது சேவா கேசஸ் நிறுவனம் ஆக்சிஜன் நிரப்பித் தர முன்வந்துள்ளது. இந்த வசதிகளை ஏற்படுத்தி தந்த நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அம்மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இப்பேருந்துகள் ஆக்சிஜன் வசதிக்காக காத்திருக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola