மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உதகை கோடை விழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், கோடை விழா நடத்த நீலகிரி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த 7 ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி உடன் கோடை விழா துவங்கியது. நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை சார்பில் வருகின்ற 31ம் தேதி வரை கோடை விழா நடைபெற உள்ளது. கோடை விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி கடந்த 21ம் தேதி துவங்கியது. உதகை தாவரவியல் பூங்காவில் 124 வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார். 21ம் தேதி துவங்கிய மலர் கண்காட்சி நேற்று வரை 5 நாட்கள் நடைபெற்றது.
மலர் கண்காட்சியில் 275 மலர் வகைகளை சேர்ந்த 5.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலர்கள் இடம் பெற்றுள்ளன.
விழாவின் முக்கிய அம்சமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களால் வேளாண் பல்கலைக்கழக கட்டிட முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் 6 பழங்குடி மக்களின் உருவங்கள் கொய் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘ஊட்டி 200’ என்று மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக 35 ஆயிரம் மலர் தொட்டியில் ஓரியடல் லில்லி, ஏசியாடிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, செம்பா, ஆஸ்டர், பால்சம் உள்ளிட்ட மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்தனர்.
இந்நிலையில் நேற்று மாலையுடன் 124 வது உதகை மலர் கண்காட்சி நிறைவு பெற்றது. கடந்த 5 நாட்களில் மலர் கண்காட்சிடை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு இரசித்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உதகை மலர் கண்காட்சியை மேலும் ஒரு வார காலத்திற்கு தோட்டக்கலை துறையினர் நீட்டிப்பு செய்துள்ளனர். இது சுற்றுலா பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.