கோவை மாவட்டம் குன்னத்தூராம்பாளையம் பகுதியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக வைக்கப்பட்ட 1.5 டன் இரும்பு பொருட்கள் கொள்ளையடித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 


கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தினால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவினாசி-அத்திக்கடவு திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அன்னூரை அடுத்துள்ள குன்னத்தூராம்பாளையம் பகுதியில் 6 வது நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


இப்பணிகள் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த சிபியரசன் (29) என்பவரது பொறுப்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவர் மே மாதம் 24 ஆம் தேதி தனது பொறுப்பில் உள்ள அவினாசி-அத்திக்கடவு திட்டப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் இரும்பு பொருட்கள் திருடு போயுள்ளதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் இரும்பு பொருட்களை திருடிய திருடர்களை வலை வீசி தேடி வந்தனர்.


இந்த நிலையில் அன்னூர் காவல் துறையினர் தென்னம்பாளையம் சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது,அவ்வழியாக வந்த ஐவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வெங்கட கிருஷ்ணன் (25), பிரசாந்த் (24), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கெளதம் (24), சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த நவீன் (25), பூபதி (25) என்பதும், குன்னத்தூராம்பாளையம் அவினாசி-அத்திக்கடவு திட்ட இரும்பு பொருட்களை திருடியதும் தெரியவந்தது. மேலும் இதில் பிரசாந்த் என்பவர் அவினாசி-அத்திக்கடவு திட்டத்தின் குன்னத்தூராம்பாளையம் நீரேற்று நிலையத்தின் காவலாளியாக பணிபுரிந்ததும், மற்றவர் அவரது நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 1.5 டன் இரும்பு பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த அன்னூர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர். அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகளுக்கான இரும்புகளை கொள்ளையடித்தவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண