சேலம் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சேலம் - கொச்சின் புறவழிச்சாலை வழியாக சென்றது. அந்த லாரி கோவை மாவட்டம் மதுக்கரை சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலையில் வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது எதிரே வந்த மற்றொரு லாரி மற்றும் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துள்ளானது. மேலும் அதிக பாரத்துடன் இருந்ததால் அடுத்ததடுத்து இரும்பு அறிவிப்பு பலகைகள் மற்றும் சாலை ஓரத்தில் வீட்டுடன் இருந்த கடை மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த பாலத்துறை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (35) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் பாஸ்கரன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த மதுக்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலை நேரத்தில் வீட்டின் வெளியே யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வரும் பேருந்துகள் சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது தொடர்ந்து செல்வதால் கருமத்தம்பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததை அடுத்து சூலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தத்துக்கு வராமல் பாலத்தின் மீது சென்ற பேருந்துகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் நேற்று ஏராளமான கல்லூரி மாணவிகள் கருமத்தம்பட்டி செல்வதற்காக கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் தனியார் பேருந்துகளில் ஏறி உள்ளனர். அதற்கு பேருந்து நடத்துனர்கள் கருமத்தம்பட்டிக்குள் செல்லாது எனக்கூறி உள்ளனர்.
இது குறித்து அப்பெண்கள் அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பெண்களின் உறவினர்கள் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கருமத்தம்பட்டி பகுதிக்கு வராமல் பாலத்தின் மீது சென்ற இரண்டு தனியார் பேருந்துகளை தேசிய நெடுஞ்சாலையில் சிறை பிடித்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பேருந்துகளை மீண்டும் கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் வழியாக செல்ல வலியுறுத்தி நடத்துனர்கள், ஓட்டுனர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து கருமத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் வழியாக பேருந்துகள் சென்றது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”தொடர்ச்சியாக கருமத்தம்பட்டி பகுதிக்குள் திருப்பூர், ஈரோடு மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் ஏதும் வராததால் கருமத்தம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள், கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து கருமத்தம்பட்டிக்குள் பேருந்து வந்து செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுவதால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது” எனத் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்