கோவையில் ஒட்டகம் மற்றும் கழுதை பாலில் டீ தயாரித்து வியாபாரம் செய்த பண்ணை விலங்குகளை வதை செய்ததாக விலங்குகள் பாதுகாப்பு நல அதிகாரிகள்  விலங்குகளை பறிமுதல் செய்தனர்.


கோவை சூலூர் அருகே சேலம் - கொச்சின் புறவழிச் சாலையில், சங்கமித்ரா என்ற விலங்கள் பண்ணை இயங்கி வருகிறது. இங்கே ஒட்டகம், கழுதை, குதிரை, நாய்க்குட்டிகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பண்ணையுல் ஒட்டகம் மற்றும் கழுதையில் இருந்து கரந்த பாலில், டீ போட்டு வியாபாரம் செய்து வந்தனர். மேலும் ஒட்டகம் மற்றும் கழுதை பாலையும் விற்பனை செய்து வந்தனர். இதனிடையே இந்த பண்ணையில் விலங்குகளை வதை செய்தவதாக தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக நேற்று தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள், இந்திய விலங்குகள் நல வாரியம் இணைந்து சங்கமித்ரா விலங்குகள் பண்ணையில் திடீர் ஆய்வு நடத்தினர்.




அப்போது இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அனுமதி பெறாமல் பண்ணையில் விலங்குகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பண்ணை வேலையாட்கள் வைத்திருந்த செல்போனில், ஒட்டகங்களை இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பண்ணையில் இருந்த இரண்டு ஒட்டகங்கள், நான்கு குதிரைகள், இரண்டு கழுதைகள், ஒரு நாய் மற்றும் இரண்டு குட்டிகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இரண்டு ஒட்டகங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சென்னையில் உள்ள பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் வளாகத்திற்கு அனுப்பி வைத்தனர். நான்கு குதிரைகள் மற்றும் இரண்டு கழுதைகள் ஒரு நாய் மட்டும் இரண்டு குட்டிகள் பராமரிப்புக்காக உதகையில் உள்ள தன்னார்வலர் நடத்தும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக விலங்குகளை வதை செய்த சங்கமித்ரா பண்ணை உரிமையாளர் மீது காவல் துறையில் புகார் கொடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.