வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம் துவங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 35 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, சிவகங்கை, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை,விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றிரவு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. இதேபோல மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே உதகை - குன்னூர் மலை ரயில் பாதையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் பாறைகள், மண் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் கிடக்கின்றன. இதன் காரணமாக உதகை - குன்னூர் இடையேயான நீலகிரி மலை ரயில் சேவை இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் இரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மலை ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை இரயில் சேவை வருகின்ற 25 ம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.