நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே, நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர், கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர். இவர்களைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விலகினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கதுரை அக்கட்சியில் இருந்து விலகுவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். 



அந்த முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நாம் தமிழர் கட்சியின் "மாநகர மாவட்ட செயலாளர்" என்ற பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்! இதுநாள் வரையில் என்னோடு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்த தோழமைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவரின் வழியில், தமிழ்தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும்" என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அழகாபுரம் தங்கதுரை கடந்த 15 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக செயல்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் தங்கத்துரையின் ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி வெளியே வருவார்கள் என கூறப்படுகிறது. இது சேலம் மாவட்டத்தை மட்டுமின்றி தமிழக முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி என்ற பிரிவின் சேலம் மாவட்ட செயலாளர் வைரம் என்பவர் கட்சியில் இருந்து விலகினார். இதேபோல், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணைத்தலைவர் ஜீவானந்தம் உட்பட 40 பேர் கட்சியிலிருந்து விலகுவதாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். 



தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி வந்த நிலையில், கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன், வடக்கு தொகுதி தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அபிராமி, வணிக பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ஒட்டு மொத்தமாக சீமான் மீது அதிருப்தியாக இருக்கிறோம். 20 பொறுப்பாளர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேறிகிறோம். மக்கள் அண்ணியமாக பார்க்கிறார்கள். சீமானின் பேச்சு முன்னுக்கு பின்னாக இருக்கின்றது. இனி எந்த கட்சியில் இணைய போகின்றோம் என இன்னும் முடிவு செய்யவில்லை. கட்சியை விட்டு வெளியேறுவது சீமானுக்கு தெரியாது. அவரிடம் தெரிவிக்கவில்லை. சீமான் அவர்களை நாங்கள் தவறாக ஏதும் சொல்லவில்லை. கட்சியை கடந்து நண்பர்களாக பயணிக்க ஆசை படுகிறோம். கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. நாம் தமிழர் இரண்டாவது கட்சியாக பிரிய வாய்ப்பு இல்லை. திமுக வலிமையான கட்டமைப்பு இருக்கிறார்கள், அதிமுக, திமுக கட்சி கட்டமைப்பு நன்றாக உள்ளது என்று கூறினர்.


தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் அதிருப்தியில் தான் உள்ளார்கள். கொள்கைக்கு நடைமுறைக்கு வித்தியாசம் உள்ளது. அதில் உடன்பாடு இல்லை. அடுத்தகட்ட தலைவர்கள் யாரும் இல்லை. எதையும் செய்ய முடியவில்லை. சீமான் ஹிட்லர் போன்று செயல்படவில்லை. திமுகவில் இணைய இன்னும் முடிவு ஏற்கவில்லை. சமூகங்களை பேசுவதில் உடன்பாடு இல்லை. அதில் சங்கடம் ஏற்பட்டுள்ளது. வெற்றியை நோக்கிய பயணம் இல்லை. சீமானை விட பெரிய ஆளுமை விஜய் கிடையாது. தவெக கட்சியில் நாங்கள் இணைய வாய்ப்பு இல்லை. சீமான் எடுக்கும் முடிவில் உடன்பாடு இல்லை தங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தனர்.