கோவையில் தொடர் மழை, குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


மாண்டஸ் புயல் கரையைக் கடந்த பின்னரும், தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொடர் மழை காராணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 




இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், போத்தனூர், வெள்ளலூர், கணபதி, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் அவதிக்குள்ளாகினர். மழையில் நனைந்தபடி மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர். வேலைகளுக்கு செல்வோர் மழை காரணமாக சரியான நேரத்துக்கு அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பிற்கு உள்ளாகினர். கோவை மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்திருக்கும் நிலையில், மழை காரணமாக குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.




இதேபோல கோவை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இன்று உக்கடம், டவுன்ஹால் , கோவை புதூர், குனியமுத்தூர், மதுக்கரை பாலக்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழையுடன் பனிமூட்டம் நிலவியது. காலை 8  மணிக்கு மேலாக பனிமூட்டம் தொடர்ந்ததால்  சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி  வாகன ஓட்டிகள் இயக்கினர். அதன் பின்னர் பனிமூட்டம் குறைந்த நிலையில், மழை மற்றும் குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண