தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் கோவையில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்திகன்றனர். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்யும் தேர்தல் நடத்தும் அலுவலகம் முன்பு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேர்தல் நடத்தும் அலுவலகம் முன்பு காவல்துறையினர் பேரிகேடுகளை அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களும் 100 மீட்டர் வரை மட்டுமே பேரணியாக வருவதற்கு அனுமதிக்கபடுகின்றனர். இதுமட்டுமின்றி மூன்று அல்லது ஐந்து பேர் வரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அந்தந்த அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களும் உரிய சோதனைகளுக்குப் பிறகே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
