நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேரம்பாடி பகுதியில் மின் கம்பத்தில் மோதி அரசு பேருந்து விபத்துகுள்ளானதில் ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமான இருந்து வருகிறது. மேலும் இம்மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகளுக்கு அருகே கூடலூர் பகுதி அமைந்துள்ளது. அதேபோல நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூட்டிய பகுதியாகவும் இப்பகுதி அமைந்துள்ளது. கூடலூர் பகுதியில் தேயிலை உற்பத்தி மற்றும் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் இருந்து வருகின்றன. தேயிலை தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிக்குள் பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. போக்குவரத்து வசதி குறைவாக உள்ள இக்கிராமங்களில் உள்ள மக்கள், அரசு பேருந்து சேவையை அதிகம் எதிர்பார்த்து உள்ளன.
குறிப்பாக கூடலூர் அருகே அய்யங்கொல்லி பகுதிக்கு நாள்தோறும் கூடலூர் மற்றும் தேவாலா பகுதிகளில் இருந்து அரசு பேருந்துகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கூடலூரில் இருந்து அய்யங்கொல்லி சென்ற அரசு பேருந்து பயணிகளுடன் மழவன் சேரம்பாடி பகுதியில் சென்றது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் அரசு பேருந்து மோதி விபத்துள்ளானது. உடனே அரசு பேருந்து ஓட்டுனர் நாகராஜ் என்ன நடந்தது என இறங்கி பார்க்கும் போது கீழிருந்த மின் கம்பிகளை கவனிக்காமல் இறங்கியுள்ளார். அப்போது காலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.
பயணிகள் அலறி அடித்துப் பார்த்த போது பரிதாபமாக அவர் உயிரிழந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் என்னவானது என தெரியாமல் அச்சம் அடைந்தனர். பின்பு பேருந்து கதவைத் திறந்து பார்க்க வந்த பயணி பாலாஜி (53) என்பவரும் மின்சாரம் தாக்கி படிக்கட்டுகளில் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் அச்சமடைந்து ஒவ்வொருவராக பேருந்து விட்டு இறங்கி நீண்ட தூரம் சென்றனர். பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஓட்டுனர் நாகராஜ் மற்றும் பயணி பாலாஜியை பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வேறு பயணிகளுக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதா எனவும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து மின் கம்பத்தில் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.