முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்துவிட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது தொடர்பாக, சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர்.


இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.




இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல்துறையினர், 5 தனிப்படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.


இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோல கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர்.



ஆறுக்குட்டி


கடந்த சில மாதங்களாக முன்னேற்றம் இல்லாமல் இந்த வழக்கு இருந்து வந்த நிலையில், மீண்டும் சூடுபிடித்துள்ளது. கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக் ஆகியோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சசிகலா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர் சிபி ஆகியோரிடமும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.


ஏற்கெனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நாரயணசாமியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் தொடர்புடைய கனகராஜ் ஆறுக்குட்டியிடம் கார் ஓட்டுநராக பணியாற்றியவர். கோடநாடு சம்பவத்திற்கு பின்னர் கனகராஜ் ஆறுக்குட்டிக்கு செல்போனில் அழைத்துப் பேசியது தொடர்பாகவும், கோடநாடு வழக்கு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.