Ooty New Road: ஊட்டிக்கு செல்ல வருகிறது புதிய பாதை ; சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்

Ooty New Route: ஊட்டிக்கு செல்ல 40 கோடி ரூபாய் மதிப்பில் மூன்றாவது மாற்றுப்பாதை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் அந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.

Continues below advertisement

நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்ல 40 கோடி ரூபாய் மதிப்பில் மூன்றாவது மாற்றுப்பாதை தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் அந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.

Continues below advertisement

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். நீலகிரி மாவட்டம் உதகைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். பல வருடங்களாக சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும், உதகைக்கு செல்ல குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மூன்றாவது மாற்றுப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


புதிய பாதை

இந்த நிலையில் தற்போது உதகை அருகே உள்ள காந்தி பேட்டை பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம் - கோவை செல்ல மூன்றாவது மாற்று பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்கும் பணிகள் 90% முடிவடைந்துள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த சாலை திறக்கப்படவுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூருக்கு செல்லாமல், நேரடியாக உதகைக்கு செல்லும் வழியில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 40 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சாலை 20.5 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாக அமைக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மலைப்பாதையில் வரும் வாகனங்கள் காட்டேரி, சேலாஸ் கெந்தலா, கேத்தி, பாலடா, கொல்லிமலை, காந்தி பேட்டை வழியாக உதகைக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால், சமவெளி பகுதியில் இருந்து பல வாகனங்கள் குன்னூர் செல்லாமல் உதகைக்கு செல்ல முடியும் எனவும், இதனால் பல இடங்களில் வாகன நெரிசலை தவிர்க்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணிகளை விரைவில் முடித்து இரண்டாம் சீசனுக்குள் சமவெளி பகுதியிலிருந்து வரும் வாகனங்களை இந்த சாலை வழியாக அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் உதகை நகரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அதேபோல குன்னூர் மலைப்பாதை மற்றும் கோத்தகிரி சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படாதவாறு இந்த மூன்றாவது மாற்று பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நீலகிரி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மூன்றாவது பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது, அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Continues below advertisement