பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் அழையாத விருந்தாளியாக தங்கும் விடுதிக்குள் சென்ற சிறுத்தை ஒன்று சாவகாசமாக சுற்றிப் பார்த்து விட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.


நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கியமான சந்திப்புப் புள்ளியாக உள்ளது. இம்மாவட்டம் இயற்கை ஏழில் கொஞ்சும் மலை மாவட்டமாக மட்டுமின்றி, அதிக வனப் பகுதிகளை உள்ளடக்கிய உயிர் சூழல் மண்டலமாகவும் விளங்கி வருகிறது. இதன் காரணமாக யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளின் வாழ்விடமாக அமைந்துள்ளது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக இருந்து வருகிறது. இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். அந்த வகையில் தனியார் தங்கும் விடுதிக்கு திடீர் விசிட் அடித்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




முதுமலை புலிகள் காப்பகம் கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இந்த புலிகள் காப்பகங்கள் ஒன்றிணைந்த வனப் பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதிகளில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த 31 ம் தேதி இரவு பந்திப்பூர் புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்கு சிறுத்தை ஒன்று அழையாத விருந்தாளியாக வந்துள்ளது. இரவு நேரத்தில் சிறுத்தை வந்த நிலையில், அப்போது விடுதியின் கதவுகள் திறந்து இருந்துள்ளன. இதனால் விடுதிக்குள் நுழைந்த சிறுத்தை சிறிது நேரம் வாசலில் நின்றிருந்தது. மேலும் ஆட்கள் யாரும் இல்லாததை உணர்ந்த சுமார் 7 வயது மதிக்கத்தக்க சிறுத்தை விடுதிக்குள் நுழைந்தது. விடுதியின் முன் வாசல் வழியாக நுழைந்த சிறுத்தை சமையலறை வரை சென்று சுற்றிப் பார்த்தது. சாவகாசமாக நடமாடியபடி சுற்றிப் பார்த்த பின்னர், மீண்டும் விடுதியில் இருந்து சிறுத்தை வெளியேறியது.



விடுதியில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், சிறுத்தை வந்து சுற்றிப் பார்த்துச் சென்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்ற காரணங்களால் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், முதுமலை மற்றும் பந்திப்பூர் வனப்பகுதியில் கணிசமான அளவு சிறுத்தைகள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.