நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை மாற்ற உச்சநீதிமன்ற படிகள் வரை ஏறி ஆணை பெற்றிருக்கிறது தமிழக அரசு. நிர்வாக காரணங்களுக்காக இன்னசென்ட் திவ்யாவை மாற்ற வேண்டியிருக்கிறது என்று அரசு சொன்னாலும், உண்மையான காரணம் அது இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.



நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா


கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீலகிரி ஆட்சியராக நியமிக்கப்பட்ட இன்னசன்ட் திவ்யா, அந்த மாவட்டத்தை மேம்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். தொடக்கத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களை அழைத்து பேசி, அவர்களை ஊக்குவித்து நகர் முழுவதும் குப்பைகளை அகற்றி சுத்தமாக்கினார். தினமும் 100 தூய்மை பணியாளர்கள் என்ற விகிதத்தில் நகரை சுத்தம் செய்த கையோடு, சாலைகளில் வைக்கப்பட்டு, நிரம்பி, பிதுங்கி கிடந்த குப்பைத் தொட்டிகளையெல்லாம் அகற்ற வைத்து, வீடு தோறும் சென்று குப்பைகளை சேகரிக்கும் திட்டத்தை அமல்படுத்தினார்.


முக்கியமாக, தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடைவிதிக்கப்படும் முன்பே, நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் டம்ளர், கப், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவிட்டார் இன்னசன்ட் திவ்யா, இது மக்கள் மத்தியிலும் சுற்றுலா பயணிகள் இடையேயும் பெருத்த வரவேற்பை பெற்றாலும், கடை வைத்து தொழில் செய்யும் நபர்கள், இந்த உத்தரவால் கடும் அதிருப்தியடைந்தனர். பசுமை நிறைந்த நீலகிரி மாவட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்னசன்ட் திவ்யா எடுத்த இந்த நடவடிக்கைக்கு எதிராக முதல் கலக குரல் கடைகாரர்கள் மத்தியில் இருந்தே எழுந்தது.


’கலக’ குரல் எழுந்தாலும் கவலையில்லை என்று பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறையையும், அதையும் மீறினால் கடைக்கே சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுத்தார் திவ்யா. இதனால், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மெல்ல மெல்ல நீலகிரி மாவட்டத்தில் குறைக்கப்பட்டது.


அதேபோல், கடந்த அதிமுக ஆட்சியில், கிராம பணியாளர்கள் நியமனத்திற்காக லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, இவர்களைதான் அப்பாயிண்ட் பண்ன வேண்டும் என்று நீலகிரி மாவட்டத்தின் முக்கிய அதிமுக புள்ளி அனுப்பிய லிஸ்டை  தூக்கி குப்பையில் போட்டு, அவரது பரிந்துரையை எந்த சட்டையும் செய்யாமல் நிராகரித்தார் இன்னசன்ட் திவ்யா. இதனால் கடுமையாக கோபமடைந்த நீலகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள், இன்னசன்ட் திவ்யா-வை இங்கிருந்து மாற்ற அப்போதே முயற்சிகள் மேற்கொண்டார்கள். ஆனால், அது முடியவில்லை.



பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி போட்டு சாதனை


இந்நிலையில் தான், யானைகள் வழித்தடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட காட்டேஜ்கள், சொகுசு விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அப்படியே அச்சு பிசறாமல் செயல்படுத்தினார் திவ்யா. சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மசினகுடி உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டிருந்த 36 காட்டேஜ்களை மூடி சீல் வைத்து அதிரடி காட்டினார். ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு சொகுசு விடுதி உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் திவ்யாவின் குழந்தையை கடத்திவிடுவோம் என்று கூட அவருக்கு மிரட்டல் வரத் தொடங்கின. ஆனால், அதற்கெல்லாம் அசராமல் ‘மூடியது முடியதுதான்’ என்று சொன்னார்.



காட்டேஜ்களுக்கு சீல் வைக்கும் அதிகாரிகள்


வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்கள் முழுமையாக அகற்றப்படும் வரை ஆட்சியரான இன்னசன்ட் திவ்யாவை மாற்றக் கூடாது என உச்சநீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. அதனால், கடந்த 2017ல் ஆட்சியராக நியமிக்கப்பட்ட திவ்யா, 2021வரை அதே மாவட்டத்தில் தொடர்ந்தார். ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக தலைமையிலான அரசு அமைந்த நிலையில், இன்னசன்ட் திவ்யாவை மாற்றும் முயற்சிகள் மீண்டும் தூசுத் தட்டி எடுக்கப்பட்டன. அதன்காரணமாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவரை மாற்ற ஆணை பெற்றிருக்கிறது தமிழ்நாடு அரசு


பின்னணியில் யார்..?


எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாவது அதிகாரிகளை வளைத்து சரிக்கட்டி, இன்னசன்ட் திவ்யாவை மாற்றிவிட வேண்டும் என்று காட்டேஜ் ஓனர்கள் செய்த காய்நகர்த்தல் இப்போது அவர்களுக்கு சாதகமாக மாறியிருக்கிறது. இதில் முக்கிய பங்கு வகித்திருப்பது வளமான துறையின் அமைச்சர் ஒருவரும், ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியும்தான் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி, தனது வேதனையை கொட்டித் தீர்த்திருக்கிறார் இன்னசண்ட் திவ்யா.


வாய் துடுக்காக பேசி வளமான துறையை தனது கையில் வைத்திருக்கும் அந்த அமைச்சரின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபரும் இன்னசன்ட் திவ்யாவால் சீக் வைக்கப்பட்ட காட்டேஜ் ஓனருமான, தமிழில் நான்கெழுத்து கொண்ட அந்த நபரின் அழுத்தத்திற்கு பணிந்து, வாய்துடுக்கான வளமான அமைச்சர் எடுத்த நடவடிக்கையால் தான் உச்சநீதிமன்றம் வரை சென்று இன்னசன்ட் திவ்யாவை மாற்ற  இப்போது ஆணை பெறப்பட்டிருக்கிறது.






வாய் துடுக்கான வளமான அமைச்சரோடு சேர்ந்து, திவ்யாவை மாற்றி, அவருக்கு குடைச்சல் கொடுக்க முயற்சிக்கும் இன்னொரு நபர்,  ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவர் ஏற்கனவே இதே மாவட்டத்தில் பணியாற்றிவர். தற்போது முக்கியமான ஒரு துறைக்கு செயலாளர் ஆகியிருப்பதால், இவரின் அதிகார தலையீட்டாலும் இன்னசன்ட் திவ்யாவை மாற்றும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


முதல்வரை சந்திக்க முயன்ற இன்னசன்ட் திவ்யா


இப்படி அமைச்சர் தரப்பிலும், பெண் அதிகாரி தரப்பிலும் இருந்து தனக்கு கடுமையான அழுத்தங்களும், அதிகார தலையீடலும், நெருக்கடிகளும் கொடுக்கப்பட்டு வருவதை முதல்வர் மு.க.ஸ்டாலிடம் நேரடியாக சென்று சொல்ல, கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்தார் ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா. அவர் சென்னையில் இருந்தபோதே அவரை மாற்றுவதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்த நிலையில், மன வேதனையோடு முதல்வரை சந்திக்காமல் மீண்டும் நீலகிரிக்கே திரும்பியிருக்கிறார்.



முதல்வரிடம் விருது பெற்ற  ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா


 யானை வழித்தடத்தை மாற்ற திட்டம் ?


எத்தனையோ பிரச்னைகள் தமிழ்நாட்டில் இருக்கும்போது, மக்களிடம் நற்மதிப்பை பெற்று, சுற்றுச்சூழலையும், யானை வழித்தடங்களையும் காக்க நடவடிக்கை எடுத்த, நீலகிரி ஆட்சியரான இன்னசன்ட் திவ்யாவை மாற்ற அரசு ஏன் இவ்வளவு முயற்சித்து, உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட வேண்டும் என்ற கேள்வியை மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எழுப்பியுள்ளர்.


தற்போது சீல் வைக்கப்பட்டிருக்கும் காட்டேஜ்கள் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டவை அல்ல என்று புதிய வரைபடம் ஒன்றை தயாரித்து, அனைத்து காட்டேஜ்களை சுதந்திரமாக செயல்பட வைக்கவே இவ்வளவு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர்கள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.






நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ?


’கம்பீர விலங்கான யானைகளின் மாண்பை பாதுகாப்பது மனித குலத்தின் கடமை’ என யானைகள் தினத்தில் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் காட்டேஜ்களை மீண்டும் திறக்கும் நடவடிக்கையை அனுமதிக்கக் கூடாது என்றும், நீலகிரி ஆட்சியர் மீது காழ்ப்புணர்வில் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.