கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக இருந்து வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கர்நாடக மாநில தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில், சென்னையிலிருந்து வந்த  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை காவல் துறையினர் துணையுடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் இக்பால், நயின் சாதிக் ஆகிய இருவரும் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருகின்றனர். இதில் நயின் சாதிக் இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்துள்ள நிலையில், ஜாபர் இக்பால் இரண்டாவது ஆண்டாக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை இவர்கள் தங்கியுள்ள இல்லங்களுக்கு சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கோவை போலீசார் உதவியுடன் சாய்பாபா காலனியில் சுப்பண்ண கவுண்டர் வீதி, நாராயண வீதி ஆகிய இடங்களில் சோதனை நடத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் ஒரு மணி  சோதனைக்கு பின்னர் கிளம்பினர். தனியார் மருத்துவமனையிலும் இருவர் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்றனர்.


பெங்களூரு குண்டுவெடிப்பு பின்னணி


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த 1ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமில்லாமல், நாடு முழுவதும்  பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பெங்களூரு காவல் துறையினர் எட்டு தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சந்தேகிக்கப்படும் நபர்கள் வாடிக்கையாளர் போல் ஹோட்டலுக்குள் நுழைந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.  அவர் கருப்பு பேண்ட், சட்டை, வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடி, முகக்கவசம் அணிந்திருந்தது சிசிடிவி கேமராவில்  பதிவானது மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.