தமிழ்நாடு பா.ஜ.க.வினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்களைச் சந்தித்த அண்ணாமலை, பா.ஜ.க.வினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், இதுவரை ஒருவரை கூட தமிழ்நாடு காவல்துறை செய்யாதது ஏன்? சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சக்திகள் மீது நடவடிக்கைகள் எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


பெட்ரோல் குண்டு வீச்சு:


பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பா.ஜ.க. தொண்டர் கருத்து பதிவிட்டவர்களை, கைது செய்வதில் அக்கறை காட்டும் காவல்துறை, சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்களை கைது செய்யதது ஏன்? என்றும் தெரிவித்துள்ளார்.


நாங்கள் என்ன இயேசுவா, ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருப்போம். எனவே காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலைமைச்சருக்கு நிபந்தனையாக மட்டுமல்ல எச்சரிக்கையாக சொல்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


மதுரை எய்ம்ஸ்-க்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. யார் என்ன செய்தாலும் மதுரையில் எயம்ஸ் மருத்துவமனை அமையும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.


கோவையில் தாக்குதல்:


கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள  துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி மோகனுக்கு சொந்தமான கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.




இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சாய்பாபா காலனி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


இந்த தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் மட்டுமின்றி சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காமாண்டோ படை, அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மொத்தமாக கோவை மாநகர காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவலர்கள் என மொத்தம் 4,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.


அதிகாரிகள் ஆலோசனை:


இதனிடையே கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் இஸ்லாமிய இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் அமைதிக் கூட்டமும் போடப்பட்டது. பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசணை மேற்கொண்டார். சட்டம் ஒழுங்கு தொடர்பாக இந்த ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.


ஆட்சியர் பேட்டி:


இந்த ஆலோசணை கூட்டத்திற்கு பிறகு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கோவை மாவட்டத்தில் நடந்த 7 சம்பவங்களில் உயிர் மற்றும் உடமைகள் சேதம் அடையவில்லை. பொது மக்கள் பதட்டமோ, அச்சமோ பட வேண்டிய சூழல் இல்லை. சிடிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 




மாநகர காவல் ஆணையாளர் பேட்டி:


இதையடுத்து பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், “அனைத்து சம்பவங்களிலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இரு சக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால் பைக் எண்ணை சிசிடிவியில் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரு சில குற்றவாளிகள் அடையாள காணப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். 


இந்நிலையில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.