கோவை காந்திபுரம் அருகே உள்ள சித்தாபுதூர் பகுதியில் பாஜக கோவை மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பாஜக நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் தினசரி வந்து செல்வது வழக்கம். பாதுகாப்பு காரணங்களுக்காக 24 மணி நேரமும் பாஜக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 22ம் தேதியன்று மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பாஜக அலுவலகத்தை நோக்கி பெட்ரோல் குண்டை வீசினர். அப்போது பெட்ரோல் குண்டு பாஜக அலுவலகத்திற்கு அருகே விழுந்தது. அதேசமயம் பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசாம்பாவிதங்கள் மற்றும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காட்டூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வெடிக்காத பெட்ரோல் குண்டு மற்றும் பாஜக அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.


சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் விகேகே மேனன் சாலையில் செல்லும் ஒரு இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பாஜக அலுவலகத்திற்கு அருகே விழும் காட்சிகளும், பாஜக தொண்டர்களும், காவல் துறையினரும் அடுத்தடுத்து பதற்றத்துடன் வந்து பார்க்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இக்காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு, தொழில்நுட்ப அடிப்படையிலான விசாரணை, சாட்சி விசாரணை அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.




இதன் அடிப்படையில் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளான கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சதாம் உசைன் (31) மற்றும் துடியலூர் பகுதியை சேர்ந்த அகமது சிகாபுதூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக உத்தரவு நகல்கள் சிறையில் உள்ள இருவருக்கும் காவல் துறையினர் வழங்கினர்.


கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகள் என மொத்தம் 6 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவியது. தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண