நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு வயது 45. இவரது மனைவி பாரதி. இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கோவிந்தராஜ் தொழில் நிமித்தமாக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. 

கடன் தொல்லை:

இதனால், அவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் கடன் தொல்லை அதிகரித்தது. தற்போது வரை ரூபாய் 20 லட்சத்திற்கு மேல் அவருக்கு கடன் ஏற்பட்டுள்ளது. கடன் தொல்லை அதிகரித்த காரணத்தால் கோவிந்தராஜ் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், கடன் தொல்லை தாங்க முடியாத கோவிந்தராஜ் விபரீத முடிவை எடுத்தார். நேற்று இரவு தனது மகன் மற்றும் மனைவியை ஒரு அறையில் பூட்டிவைத்தார். பின்னர், தனது மூன்று மகள்களான 9 வயதே ஆன பிரக்திஷா ஸ்ரீ, 7 வயதே ஆன ரித்திகா ஸ்ரீ மற்றும் 3 வயதே ஆன தேவஸ்ரீ ஆகிய மூன்று பேரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்றார். 

வெட்டிக் கொலை:

அங்கே தனது மகள்கள் என்றும் பாராமாலும், பச்சிளம் சிறுமிகள் என்றும் பாராமல் தனது மகள்களை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். தனது மகள்களை கொலை செய்த பிறகு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தான் அடைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்த பாரதி உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வரவழைத்துள்ளார். 

பின்னர், கதவை திறந்து பார்த்தபோது இந்த கொடூர சம்பவம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உயிரிழந்தவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பெரும் சோகம்:

கோவிந்தராஜுன் இந்த முடிவுக்கு கடன் தொல்லைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் பெற்ற தந்தையே சிறுமிகளான தனது 3 மகள்களையும் வெட்டிக் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் உண்டாக்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் சமீபகாலமாக குடும்ப பிரச்சினை காரணமாக கொலை மற்றும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. மக்களுக்கு முறையான மன ஆலோசனைகளையும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அறிவுரையும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.