ஜெய் பீம் திரைப்படத்தின் இறுதிக்காட்சியான நடிகரை சூர்யாவை போல பழங்குடியின மாணவி கால் மேல் கால் போட்டு செய்தித்தாள் படிக்கும் காட்சி, தாழ்ந்து கிடக்கும் மக்களை கல்வி தான் உயர்த்தும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில் பழங்குடியினர் முன்னேற ஒரே ஆயுதம் கல்வி என்பதை உணர்ந்து, கல்வியில் பின் தங்கியிருக்கும் பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டும் அறப்பணியில் நல்வழிகாட்டி அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது.




கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் அருண்பாலாஜி. பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள 36 வகையான பழங்குடி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் நல்வழிகாட்டி என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். கடந்த 2007 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பில் மாநிலம் முழுவதும் 110 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர்.




இந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கு உதவுதல், உயர் கல்வி மற்றும் வேலைகளுக்கு வழிகாட்டுதல், வாழ்வியலுக்கு தேவையான உதவிகளை செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். மேலும் பழங்குடியின மாணவர்களின் இடத்திலேயே சிறந்த ஆசிரியர்களை கொண்டு மாலை நேர கற்றல் வகுப்பு எடுத்தல், மக்கள் கணினி என்ற திட்டத்தின் மூலம் கணினி பயிற்சியளித்தல், பழங்குடியின வாழ்வியல் மேம்பாட்டு உள்ளிட்டவற்றையும் செய்து வருகிறார். அதேபோல பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.




நல்வழிகாட்டி அறக்கட்டளை மூலம் 67 மாணவர்கள் உயர் கல்வி முடிக்கவும், மாலை நேர கற்றல் மையத்தின் மூலம் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வழிகாட்டவும் செய்துள்ளதாக அவ்வமைப்பின் நிறுவனர் அருண்பாலாஜி தெரிவித்தார்.




தொடர்ந்து பேசிய அவர், ”பழங்குடியின மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். ஜெய் பீம் திரைப்படத்தில் காட்டியதை விட பல மடங்கு அநீதிகள் அவர்களுக்கு இழைக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. பழங்குடிகள் முன்னேற ஒரே ஆயுதம் கல்வி மட்டும் தான்.


எனது வருமானத்தை பயனுள்ள வகையிலும், சமுதாயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என முனைப்பிலும் நண்பர்களுடன் இணைந்து நல்வழிகாட்டி அமைப்பை துவக்கி செயல்பட்டு வருகிறோம். பேராசிரியர் கல்யாணி, வி.பி.குணசேகரன் உள்ளிட்டோர் பழங்குடியின மேம்பாட்டிற்காக பாடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் ஏற்பட்ட அறிமுகத்தால் அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டு பழங்குடிகள் கல்விக்காக எங்களால் இயன்றதை செய்து வருகிறோம். மலை மற்றும் சமவெளி பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் இடத்திற்கே சென்று கல்வி மற்றும் திறன் மேம்பாடு குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனால் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில வருவதே சாவலானதாக உள்ள நிலையில், இடை நிற்றலை தவிர்த்து தொடர்ந்து பயில உதவி செய்து வருகிறோம்.




நான் அறிந்த வரை தென்னிந்தியாவில் பழங்குடியின மாணவர்கள் நீட், டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் இலவச பயிற்சி மையங்கள் இல்லை. எனவே எனது வீட்டின் மாடியில் பேராசிரியர் கல்யாணி அரங்கம் என்ற பெயரில் பழங்குடியின மாணவர்களுக்கான போட்டி தேர்வு பயிற்சி மையத்தை உருவாக்கி வருகிறேன். அதேபோல தையல், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கவும் திட்டமிட்டுள்ளேன்என அவர் தெரிவித்தார்.


நல்வழிகாட்டி பழங்குடிகளின் கல்விக்கும், வாழ்வுக்கும் உதவும் நல்ல வழிகாட்டி!