மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டம் உயிர்க்கோள காப்பகங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல இம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் வனவிலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது. குறிப்பாக கூடலூர் அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் புலிகள், காட்டு யானைகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள முதுமலை யானைகள் முகாமில் கிராமப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், தாயைப் பிரிந்து பரிதவிக்கும் நிலையில் மீட்கப்படும் குட்டி யானைகள் உள்ளிட்டவை முதுமலை யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முதுமலை யானைகள் முகாமில் மொத்தம் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
முதுமலை யானைகள் முகாமில் கும்கி, வளர்ப்பு யானைகளை பார்க்கவும், காட்டிற்குள் சவாரி செல்லவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்க்க, அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல முதுமலை சாலையில் காட்டு யானை, காட்டு மாடு, மான் உள்ளிட்ட வன விலங்களை எளிதாக பார்க்கும் வாய்ப்புகளும் உள்ளது. இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
3 நாட்களுக்கு மூடல்
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நீலகிரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி நீலகிரி மாவட்டத்திற்கு கன மழை மற்றும் பலத்த காற்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் கடந்த ஒரு வார காலமாக கனத்த மழை காரணமாக மின்சார மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கபட்டுள்ளது. மேலும் மழை தொடர்ந்து நீடிக்கும் காரணத்தால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, தெப்பக்காட்டில் இயங்கி வரும் முதுமலை புலிகள் காப்பகத்தின் சூழல் சுற்றுலா இன்று முதல் 22ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூடப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.