நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் கிராமப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் பயிற்சி பெற்ற கும்கி யானைகள், தாயைப் பிரிந்து பரிதவிக்கும் நிலையில் மீட்கப்படும் குட்டி யானைகள் உள்ளிட்டவை முதுமலை யானைகள் முகாமில் பாரமரிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய யானைகளை தங்களது குடும்பத்தின் ஒரு உறுப்பினர்களாக கருதி அன்பையும், அக்கறையும் காட்டி பாகன்கள் வளர்த்து வருகின்றனர். அவர்களில் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெல்லி ஆகியோர் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். 


தாயை பிரிந்து உடம்பில் பல காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானைக்கு ரகு எனப் பெயரிட்டு பொம்மனும், அவருக்கு துணையாக வரும் பெல்லியும் வளர்த்து வந்தனர். ஆசனூர் வனப்பகுதியில் மிகவும் பலவீனமாக நிலையில் மீட்கப்பட்ட அம்மு என்ற குட்டி யானைக்கு பொம்மி என பெயரிடப்பட்டு, அந்த யானையை பராமரிக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.. பேருயிரான யானைகள் மீது பேரன்பை கொட்டி இருவரும் வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் பொம்மனும், பெள்ளியும் திருமணம் செய்து கொண்டார்கள். 


இதனை மையமாக வைத்து பழங்குடிகளின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கும் இருக்கும் உறவையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் பதிவு செய்திருந்தது. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் சிறந்த ஆவணப்படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியது.


இதையடுத்து அப்படத்தில் இடம்பெற்ற பொம்மன், பெல்லி ஆகியோருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொம்மன், பெல்லி ஆகியோரை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து, பாராட்டு கேடயமும், தலா ஒரு இலட்ச ரூபாய்க்கான காசோகளை வழங்கினார். இதேபோல யானை பாகன்களுக்கு நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுக்காக குடியிருப்பு கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.


இந்நிலையில் வருகின்ற 9 ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தந்து, பொம்மன், பெல்லி ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். பிரதமர் வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் வருகை புரிவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் வருகின்ற 06 ம் தேதி முதல் 09 ஆம் தேதி வரை முதுமலையில் உள்ள அனைத்து ஓய்வு விடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் மூடப்படுகிறது. மேலும் வன விலங்குகளை காணுவதற்கான வாகன சவாரியும் 07 ம் தேதி முதல் 09 ம் தேதி வரை  தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என முதுமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் தெரிவித்துள்ளார். பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண