கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, துடியலூர், சிங்காநல்லூர், சூலூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
இரண்டாவது இடத்திற்கு போட்டி:
அப்போது பேசிய அவர், கோவையில் கணபதி ராஜ்குமாருக்கு பிரச்சாரம் செய்துள்ளேன். கோவை திமுக வேட்பாளர் நிச்சயமாக வெற்றி பெறுவார். கோவையில் இரண்டாவது இடத்திற்கு போட்டி இருக்கும் என்பது தெரிகின்றது. திமுக ஆட்சியின் திட்டங்கள் மக்களை சென்றைடைந்து இருக்கின்றது. மக்கள் தெளிவாக திமுக கூட்டணி இருக்கும் கட்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். பா.ஜ.க எந்த பொறுப்பிற்கும் வந்து விடக்கூடாது என தெளிவாக இருக்கின்றனர். 40 இடங்களிலும் கூட்டணி வெற்றி பெறும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழகத்தில் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் உரிமைதொகை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை போல் ஒரே பயனாளிக்கு பல எண்கள் கொடுத்த திட்டம் போல திமுக திட்டங்கள் கிடையாது. திமுகவின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து இருக்கிறது. காலை உணவு திட்டம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. திட்டங்கள் பெயரளவில் இருக்கிறது என்பது சொல்வதை ஏற்க முடியாது.
போதைப்பொருள் விவகாரம்:
போதைப்பொருள் விவகாரத்தை பொறுத்த வரை, அந்த துறையே அவர்களிடம் தான் இருக்கிறது. மத்திய அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசு அதற்கு உதவ தயாராக உள்ளது. குஜராத்தில் பல லட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த துறைமுகம் யாருடையது என்று அனைவருக்கும் தெரியும். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அந்த விசாரணையே மூடிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைக்கு உதவுவதற்கு நிச்சயமாக தமிழக அரசு தயாராக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
கனவு காண்பது உரிமை:
கோவையில் 60 சதவீத வாக்குகளை பெறுவேன் என அண்ணாமலை சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு, “கனவு காண்பது அவர்களுடைய உரிமை. ஆனால் வெற்றி நிச்சயமாக திமுகவிற்கே. ஒரு பைசா செலவழிக்க மாட்டார்கள் என்றால், எதற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அவ்வளவு பணம் வாங்கினார்கள்? யாரும் இங்கு காசைக் கொட்டி வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. முதல்வரின் திட்டங்களை நம்பித்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்” எனப் பதிலளித்தார்.