கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பல்வேறு சாலைகளில் எரிவாயு இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு  பணிகள் நடைபெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சாலைகளை தோண்டி இந்தப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழைக்காலத்திலும் இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக இருக்கிறது. இதனால் அந்த சாலைகளில் செல்ல முடியாத நிலை இருக்கிறது. அந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அந்த சாலையில் கடும் சிரமத்திற்கு இடையே பயணித்து வருகின்றனர். சேறு அதிகளவில் இருப்பதால் நடப்பவர்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.


இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கேஸ் மற்றும் குடிநீர் இணைப்பிற்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை கோடைக்காலத்திலேயே முடித்து இருக்க வேண்டும். தற்போது மழைக்காலத்தில் பணிகள் நடப்பதால், சாலைகள் அனைத்தும் சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ளது. இச்சாலைகளில் பயணிப்பவர்களின் உடைகளும், வாகனங்களும் சேறும், மண்ணும் அப்பி அழுக்கு அடைக்கின்றன. இந்த சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்தப் பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைத்து தர வேண்டும்” எனத் தெரிவித்தனர்.




குனியமுத்தூர், கோட்டூரில் சாலை பிரச்சனை


இதேபோல குனியமுத்தூர் பகுதியில் குடிநீர் இணைப்பு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த சாலை பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலைகளை இணைக்கும் பிரதான சாலையாக இருப்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்லும். இந்த நிலையில் சாலை தோண்டப்பட்டு இருப்பதாலும், மழைக்காலம் என்பதாலும், சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் மட்டுமின்றி நடந்து செல்பவர்கள் கூட இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாற்றுப்பாதையில் பல கிலோ மீட்டர் சுற்றி வாகன ஓட்டிகள் செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் இந்தப் பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 2.0 குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதனை அடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கோட்டூர் பேரூராட்சியில் உள்ள பெரும்பாலான இடங்களில் 2.0 குடிநீர் திட்டத்திற்காக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாததால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. 


இந்நிலையில் கோட்டூர் ரெயின்போ காலனி அருகே 30-க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு ஆர்.கே.ஆர் ஞானோதயா மேல்நிலைப்பள்ளி பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது திருப்பத்தில் திரும்பும் பொழுது 2.0 குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிக்குள் வேனின் பின் சக்கரம் மாட்டி இடது புறம் சாய்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் பயந்து அலறினர். பள்ளி குழந்தைகளின் சத்தம் கேட்டு உடனடியாக வந்த  அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பள்ளிக் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியோடு பள்ளி வாகனம் குழியில் இருந்து வெளியேற்றப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, 2.0 குடிநீர் திட்டப் பணிக்காக குழிகள் தோண்டி விட்டு சரியாக மூடாததால் தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும், விரைவாக இந்த பணிகளை சரிவர செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.