கோவை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கோவை - திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் அருகே இருந்து ராமநாதபுரம் பங்குச்சந்தை அலுவலகம் வரை 238 கோடி ரூபாய் செலவில் 3 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டு வந்த இந்தப் பாலம், பணிகள் முடிவடைந்து கடந்த மாதம் 11ம் தேதியன்று திறக்கப்பட்டது. 




பாலம் திறக்கப்பட்ட சில நாட்களில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். இதன் காரணமாக அந்த பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், வேகத்தடைகள் அமைக்கப்பட்ட கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் ஒருவர் பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து பாலத்தின் வளைவுகளில் ஒரு பகுதி மணல் மூட்டைகள் அடுக்கி அடைக்கப்பட்டது.





இந்நிலையில் நேற்று கோவை அரசு மருத்துவமனையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற இரண்டு கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்றன. அந்த கார்கள் மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்ற போது, அங்கிருந்த வேகத்தடைகளை இரண்டு கார் ஓட்டிகளும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. திடீரென பிரேக் பிடித்ததில் இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 




புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஒரே மாதத்திற்குள் ஏற்பட்ட விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக வேகத்தடை, இரும்புத் தடுப்புகள், ஒளிரும் பட்டைகள், அறிவிப்பு பலகைகள், 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டுமென அறிவுறுத்தும் வகையில் சாலையில் எழுதப்பட்ட எண்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காவல் துறை சார்பில் விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையிலும்,  அவை பயனளிக்காமல் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  




இதனிடையே பாலத்தில் அமைக்கப்பட்ட வேகத்தடைகளாலும் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து இருந்த 6 வேகத்தடைகள் 3 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கார் விபத்தினால் பாதிக்கப்பட்ட விஜயகுமார் கூறுகையில், ”அடுத்தடுத்து 6 வேகத்தடைகள் இருந்ததால் எனது காரின் வேகத்தை குறைத்து ஏறியிறங்கும் போது, பின்னால் வேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதேபோல தொடர்ந்து பல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. 




இந்தப் பாலத்தில் பயணிக்கும் போது ஆபத்துகள் அதிகமாக உள்ளது. சுங்கம் - உக்கடம் பைபாஸ் சாலைக்கு இறங்கும் பகுதியில் சாலை குறுகலாக உள்ளது. மேம்பாலத்தின் மேல் உள்ள சுவர்கள் சிறியதாக இருப்பதால், வாகன ஓட்டிகள் பாலத்தில் இருந்து கீழே விழும் நிலை உள்ளது. இதனைத் தவிர்க்க சுவர்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது  மேம்பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் அமைக்க வேண்டும். சுங்கம் பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைத்து மேம்பாலத்தை அகலப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண