தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிவேல். இவரது மனைவி கோமலவள்ளி. இத்தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூன்றாவது மகள் மோகனா, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தனது தாயுடன் ஊருக்கு செல்ல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலை கருமத்தம்பட்டிக்கு வந்த மோகனா, பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்து நின்ற ஒரு காரில் திடீரென மோகனா ஏற முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த  கோமலவள்ளி தனது மகளை தடுத்து நிறுத்தவே, காரில் வந்த இளைஞர்கள் மோகனாவை காருக்குள் இழுத்து அங்கிருந்து செல்ல முயன்றனர்.




காவல் துறையினர் விசாரணை


இதனை தொடர்ந்து கோமலவள்ளி தனது மகள் மோகனாவின் தலை முடியை பிடித்தவாறு, காரின் பின்னாலேயே சென்றுள்ளார். இதனைப் பார்த்த பக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரை மடக்கி பிடித்தனர். இதைடுத்து காரில் வந்தவர்களை பொதுமக்கள் பிடித்து விசாரித்த போது, காரில் வந்த இளைஞர்களில் ஒருவர் அந்த பெண்ணின் காதலன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை காரில் இருந்து இறக்கி விடுமாறு அங்கிருந்து அவர்கள் இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த இளைஞர்கள் மோகனாவை காரில் இருந்து கீழே இறக்க மறுத்ததால், பொதுமக்கள் சிலர் திடீரென அந்த இளைஞர்களை தாக்க முயன்றனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் மோகனாவை காரில் இருந்து இறக்கி, கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் காரில் வந்த டேனியல் என்ற இளைஞர் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மோகனாவை காதலித்து வருவதாகவும், திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், மோகனா ஊருக்கு செல்லும்போது தாயிடம் இருந்து தப்பி சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தனது மகளை காப்பாற்ற கோமலவள்ளி காரின் பின்னால் ஓடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது