கோவை மாவட்டம் சார்பில் சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து கழகத்தில், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசு பணி வழங்குதல், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கோவை மாவட்ட பணிமனை அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 3 தவணையாக 1582 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த ஆட்சி காலத்தில் ஊதிய உயர்வு இழுத்தடிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் இழுத்தடிக்கப்படாமல் வழங்கப்பட்டது. பணியாளர்களுக்கு சம்பள உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து மிகச் சிறப்பான ஒரு திட்டம். தற்பொழுது இந்த திட்டத்திற்கு விடியல் பயணம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, போக்குவரத்து துறையும் காப்பாற்றப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே மிகப்பெரிய துறையாக தமிழ்நாடு போக்குவரத்து துறை உள்ளது.


பொருளாதார சூழலுக்கு ஏற்ப திட்டங்களை முதலமைச்சர் தந்து வருகிறார். எந்த திட்டமும் நிறுத்தி வைக்கப்படாது. திராவிட மாடல் அரசு போக்குவரத்து துறையை காக்கும் வகையில் செயல்படுகிறது. புதிய பணியாளர்களை நியமனம் செய்வதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகள் இன்னும் 3 மாதங்களில் வர உள்ளது. போக்குவரத்து துறை சேவை செய்யும் துறை. போக்குவரத்து துறையில் உள்ள பணியாளர்கள் சேவை செய்யும் மனநிலையோடு பணியாற்ற வேண்டும். எல்லா கிராமங்களுக்கும் பேருந்து வசதி தமிழ்நாடு தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாடு மட்டும் தான் சமச்சீரான வளர்ச்சியை அடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.




இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், “பெண்களுக்கான கட்டணமில்லா பயணத்திட்டம் என்பது மகளிர் விடியல் பயணம் என்ற பெயரில் சிறப்பாக நடைபெறுகிறது. 40 சதவீதமாக இருந்த பெண்கள் பயணம், 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாள்தோறும் 48 இலட்சம் பேர் பெண்கள் கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் பயணம் செய்கின்றனர். இத்திட்டத்திற்கு முதலமைச்சர் வழங்கிய நிதி போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படவும் பயன்படுகிறது. புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறையை நீக்க புதிய பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஆட்சி பொறுப்பு ஏற்ற போது எவ்வளவு மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் ஓடியதோ, அதில் மாற்றம் இல்லை. கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படும் போது போது, நிறுத்தப்பட்ட அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். மின்சார பேருந்துகள் சென்னையை தொடர்ந்து பரிசத்ய முறையில் மற்ற மாவட்டங்களிலும் இயக்கப்படும்” எனத் தெரிவித்தார். பள்ளி, கல்லூரி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் போது, அரசு பேருந்துகள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்படுவதால் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “மஞ்சள் நிற அரசு பேருந்துகளால் ஒரு சிக்கலும் இல்லை. அந்த மஞ்சள் நிறம் வேறு. இந்த மஞ்சள் நிறம் வேறு. நீல வண்ண பட்டையும் இருக்கும். புதிய பேருந்துகள் முகப்பே வித்தியாசமாக இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தாலே அரசு பேருந்து என்பது தெரியும். இதனால் குழப்பம் வராது” எனப் பதிலளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், ”1400 பேருந்து புனரமைக்கப்பட உள்ளது. பயணச்சீட்டு ஆன்லைன் முறை வரும் போது சில்லறை பிரச்சனை இருக்காது. கட்டணமில்லா மகளிர் திட்டத்தில் பயணிக்கும் மகளிரை நடத்துனர்கள் இழிவுபடுத்தியது கடந்த காலங்களில் நடந்தது. பொத்தம் பொதுவாக தற்போதும் நடப்பதாக சொல்லக்கூடாது” எனத் தெரிவித்தார். இதற்கு முன்னதாக தேனிக்கு பணி மாறுதல் வேண்டி ஒட்டுனர் கண்ணன் என்பவர் 6 மாத குழந்தையை அமைச்சர் சிவசங்கர் காலில் போட்டு கோரிக்கை வைத்த ஒட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது மனைவி டெங்கு காய்ச்சல் வந்து உயிரிழந்து விட்டதால் பணி மாறுதல் வேண்டி அவர் கோரிக்கை வைத்தார்.