கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், குடிநீர் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். இதனிடையே கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகராட்சியில் 197 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் 113 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்கம், புதிய சாலைகள் உள்ளிட்ட சாலைப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இன்று 38 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகள் துவக்கப்பட உள்ளன. கூடுதல் நிதி பெற்று கோவை மாநகராட்சியில் விடுபட்ட அனைத்து சாலைகளும் புதிப்பிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
ஆட்சி மாறினால் மின்சாரத்துறை அமைச்சர் சிறை செல்வார் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, “சில பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கின்றனர். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கரந்த பால் மடி புகாது என்ற பழமொழிக்கு ஏற்ப, நீங்க சொன்ன ஆளின் கனவு எந்த காலத்திலும் பலிக்காது” என அவர் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”நோட்டோவோடு போட்டி போடுபவர்கள் கோவை மாநகராட்சியில் எவ்வளவு வார்டில் நின்றார்கள்? இவ்வளவு வீர வசனம் பேசுபவர் அரவக்குறிச்சியில் ஏன் மண்ணைக் கவ்வினார்? ஏன் மக்கள் விரட்டியத்தனர்? கடுமையான முயற்சி எடுத்தும் அவர்களால் கோவை மாநகராட்சியில் ஒரு வார்டிலும் ஜெயிக்க முடியவில்லை. ஒரு மாநகராட்சி, நகராட்சியிலும் ஜெயிக்க முடியவில்லை. ஊடக விளம்பரத்திறாக இதுபோல பேசுகிறார். நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், இப்போதே நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வளவு வீர வசனம் பேசுபவர் அரவக்குறிச்சி தேர்தலின் போது, ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். அந்தப் பணம் எங்கே இருந்து வந்தது?காவல் துறையில் பணியாற்றி சேர்த்தாரா? ஆடு மேய்த்து சேர்த்த பணத்திலா கொடுத்தார்? நேர்மையான அதிகாரி என்ற மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளார். ஏன் வேலையை விட்டு விட்டு வந்தார்? எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது.
பாஜக ஆளும் மாநிலங்களில் நிலக்கரி ஏன் கூடுதல் விலைக்கு வாங்னார்கள்? தமிழ்நாட்டில் குறைவான விலைக்கு நிலக்கரி வாங்கினோம். நீலக்கரி தட்டுப்பாடு இருந்த சூழலில், தட்டுப்பாடு இன்றி மின்சாரம் தந்தோம். ஆனால் பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மின்சாரம் இன்றி தொழிற்சாலைகள் மூடப்பட்டன. நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் முதலமைச்சர் நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதலமைச்சர் இருப்பார்.
மக்கள் பணியாற்றுபவர்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து வந்தால் நடவடிக்கை எடுக்கலாம். கடந்த அதிமுக ஆட்சியில் அணிலால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சொல்லியுள்ளனர். அவர் ஒரு படித்த முட்டாள், அதிமேதாவி. மட்டரகமான அரசியல்வாதி. விளம்பரத்திற்கும், வேலைக்கும் வித்தியாசம் உள்ளது. நீங்க சொன்ன நபர் வெட்டி விளம்பரம் செய்கிறார். அவருக்கு தரம் தாழ்ந்து பதில் சொல்லி நேரத்தை வீண் செய்ய வேண்டாம். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வழக்கு தொடர்வார்கள். 4 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு பிரதான எதிர்கட்சி எனச் சொல்வது ஏற்புடையதா?அவர்களை விட கூடுதல் சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட இயக்கங்கள் உள்ளன” என அவர் தெரிவித்தார்.