தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கோவைக்கு இன்று மாலை வருகை தர உள்ளார். நாளை ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடுகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”தமிழகத்தில் மின்சாரத் துறையில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய மின் கட்டணம் உயர்த்துவது குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பிக்ஸ்ட் சார்ஜ் மற்றும் டிமண்ட் சார்ஜ் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும், அதனைக் குறைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர். முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் அக்கட்டணங்களை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். இரண்டொரு நாளில் இறுதி செய்யப்பட்டு ஒழுங்கு முறை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும்.


இன்று கோவைக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. ஒரே அரசு நிகழ்ச்சியில் ஒரு இலட்சத்து 7 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் துறை அதிகாரிகள் பல கட்ட ஆலோசணைக் கூட்டம் நடத்தியுள்ளனர். போக்குவரத்து நெரிசல் இல்லாத வகையிலும், மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அலங்கார வளைவு, தோரணம், கொடி இல்லாமல், நிகழ்ச்சி எளிமையாகவும், மக்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சியாகவும் இருக்கும்.


மின்சார வாரியம் இழப்புகளை சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ள நிலையில், சிறு, குறு தொழில் முனைவோருக்கு சலுகை கொடுக்க முடியுமா? சிலிண்டர்,  விலைவாசி உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கான கட்டணத்தை குறைக்க மட்டுமே பரிசீலணை செய்யப்படும். மற்ற கட்டணங்களில் மாற்றமில்லை. 


நோட்டோவுடன் போட்டிபோடும் கட்சியை எங்களுடன் சேர்த்து ஒப்பிட்டு பேசுவது நியாயமில்லை. இல்லாத ஒருவரை இருப்பதாக மாயத்தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன. கோவை மாநகராட்சியில் ஒரு வார்டில் கூட அவர்கள் ஜெயிக்கவில்லை. மக்கள் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது? யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது? என்பதை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். 20 பேர் சேர்ந்து போஸ்டர் மீது போஸ்டர் ஒட்டுவதால் கட்சி இருப்பதாகிவிடாது. மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டண உயர்வு தொடர்பாக கருத்து கேட்டு வருகிறது. அதில் மக்கள் கருத்து சொல்ல உரிமை உள்ளது” என அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்