கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஈராண்டு சாதனை மலர் வெளியிடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக அரசின் ஈராண்டு சாதனை மலரை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி,  11 கோடி ரூபாய் மதிப்பலான அரசு நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், ”சண்டைக்கார பொம்பளைங்க எல்லாம், சொந்தக்கார பொம்ளைங்க ஆயிட்டாங்க. எப்படின்னா முதல்வர் இலவசமாக பேருந்து பயணத்தை அளித்ததால் தான். 


கோவை மாவட்டத்தில் மட்டும் 16 கோடியே 47 இலட்சம் பெண்கள் இலவசம் பேருந்தில் பயணித்து உள்ளார்கள். கோவையில் ஒரு நாளைக்கு மட்டும் 2 இலட்சம் 50 ஆயிரம் பெண்கள் இலவச பேருந்தில் பயணித்து வருகின்றனர். இந்தியாவில் இதுபோன்ற திட்டம் எந்த மாநிலத்திலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் இல்லை. திமுக கடந்த 2 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகள் செய்துள்ளது. 1 இலட்சம் 50 ஆயிரம் விவசாயிகள், 1 இலட்சம்  50 ஆயிரம் நெசவாளர்களுக்கு இலவச மின் இணைப்பை மின்சாரதுறை வழங்கியுள்ளது. சொல்வதற்கு தகுதியான அரசு என்றால் முக ஸ்டாலின் தலைமியிலான அரசு தான். கோவை மாவட்டம் தலை நிமிர்ந்து நிற்கும். அதற்கான திட்டத்தை முதல்வர் கொடுத்து வருகிறார்” எனத் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 11 கோடி ரூபாய் அளவிளான நலத்திட்டங்கள் இன்று வழங்கப்பட்டது. திராவிட மாடல் என்றால் பலருக்கு மகிழ்ச்சி, ஒருசிலருக்கு வயிற்று எரிச்சல். அரசின் சாதனை திட்டங்களையும், செயல்களையும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம், கொரோனா நிவாரணம் 4 ஆயிரம் ரூபாய், காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் தந்துள்ளார். பெண்களின் சூழ்நிலை அறிந்து காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார். 


9 ஆயிரம் கோடி மதிப்பில் கோவை மெட்ரோ இரயில் திட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெங்களூர், கர்நாடகா செல்ல இருந்த தொழில் நிறுவனங்களை கோவையில் அமைய முதல்வர் முயற்சி எடுத்துள்ளார். எந்த கட்சிக்கு வாக்கு அளித்தீங்க என்று கேட்டு உங்களுக்கு நலத்திட்டங்களை நாங்கள் வழங்கவில்லை. எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண