கோவை வ.உ.சி மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முடிவற்ற பணிகளை, அத்துறை அமைச்சர் கேஎன்.நேரு, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது 11.8 கோடி மதிப்பீட்டில் 27 முடிவற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும் 67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து 32.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 703 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். இதையடுத்து மேடையில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, “ஈரோட்டில் இரண்டாவது பேருந்து நிலையம் அமைக்க அமைச்சர் முத்துசாமி நிதியுதவி செய்துள்ளார். ஈரோட்டை பாதி கவனிக்க வேண்டும் என அமைச்சர் முத்துசாமி சொன்னார். ஈரோட்டை நாங்கள் முழுதாக கவனித்தால் தான், நீங்கள் வெற்றி பெற்றீர்கள்.
ஸ்மார்ட் சிட்டியில் கோவை மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. குடிநீர் வழங்கலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. கேரள அரசுடன் பேசி சிறுவாணி அணையில் இருந்து முறையாக தண்ணீர் பெற்று தரப்பட்டது. பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் வருகின்ற அக்டோபர் மாதத்தில் முடிவடையும். அக்டோபரில் இருந்து கோவைக்கு தினமும் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி தான் குடிநீருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் 2 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 60 சதவீத மக்கள் நகரத்தில் தான் இருக்கின்றனர். செய்ய வேண்டிய கடமைகளை நாங்கள் செய்கிறோம். அதற்கான நன்றியை நீங்கள் காட்ட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என். நேரு, “கோவை மாநகருக்கு நாள் ஒன்றுக்கு 298 எம்.எல்.டி. குடிநீர் தேவை. ஆனால் 214 எம்எல்டி தண்ணீர் தான் கிடைத்து விருகிறது. பில்லூர் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறப்போகிறது. அத்திட்டத்தில் இன்னும் ஒன்றரை கி.மீ. தான் பாக்கி உள்ளது. அப்பணிகள் சிக்கீரம் முடியும். 188 எம்.எல்.டி தண்ணீர் கூடுதலாக வந்ததும் கோவை மாநகருக்கு தினமும் தண்ணீர் வழங்கப்படும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தினமும் தண்ணீர் வழங்கப்படும். சிறுவாணி, ஆழியார் அணைகள் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் கேரள அரசுடன் கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரில் 280 கி. மீ. க்கு சாலைகளை சீரமைக்க பணம் ஒதுக்கி உள்ளோம்.
உத்திர பிரதேச சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர்களால் செய்ய முடியுமா? தலையை சீவ 10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு போதும் என பதில் சொல்லிவிட்டார். நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம். இவர்கள் புதிதாக ஆரம்பித்துள்ளார்கள். பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் எனவும், ஆனால் நாங்கள் எப்போதும் போல ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்காத காரியம் எல்லாரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை” எனத் தெரிவித்தார்.