மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து வருகின்றன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக இரண்டாவது சீசன் துவங்கி இருப்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் சுற்றுலாவிற்காக குன்னூர், உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு வந்து செல்கின்றனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு வாகனங்களில் நீலகிரிக்கு வந்ததால், போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.


இந்நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 57 சுற்றுலா பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் சுற்றுலா பேருந்தில் நீலகிரிக்கு சுற்றுலாவிற்காக வந்துள்ளனர். பின்னர் அப்பேருந்தில் தென்காசிக்கு திரும்பியுள்ளனர். அப்போது குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் நிதின் (15), தேவிகலா (36), முருகேசன் (65), முப்புடாதி (67), கெளசல்யா (29), இளங்கோ (64), செல்வன் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட 32 பேருக்கு குன்னூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள 4 பேருக்கு உதகை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று காலை பேருந்தின் அடியில் சிக்கி இருந்த பத்மராணி என்பவரின் உடல் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.


குன்னூர் விபத்து நடந்த இடத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் குன்னூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த 60 பேர் கிளம்பி கொச்சின் குருவாயூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்ற பின்னர், குன்னூர் சுற்றி பார்த்து விட்டு திரும்பி போகும் போது விபத்து ஏற்ப்பட்டுள்ளது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினர். கோவையில் இரண்டு பேரும், உதகையில் இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களுக்கு 2 இலட்ச ரூபாய் நிவாரணம் அவர்களது ஊரில் வாரிசுகளிடம் வழங்கப்பட உள்ளது.




நேற்று சம்பவம் நடைப்பெற்ற உடன் மாவட்ட நிர்வாகம் திறமையாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டது. 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ், தொண்டு நிறுனத்தினர் சிறப்பாக செயல்பட்டனர். 32 பேர் நலமாக உள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனை பெற்ற பின் அவரவர் சொந்த கிராமத்திற்க்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். அவரவர் சொந்த கிராமத்திற்கு அனுப்பும் பணியை இன்று மாலைக்குள் மாவட்ட நிர்வாகம் மேற்க்கொள்ளும். காயமடைந்த 32 பேருக்கும் மன நல ஆலோசனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அமரர் ஊர்தி வாகனங்கள் மூலம் தென்காசிக்கு கொண்டு செல்லப்பட்டது