தனியார் கல்வி நிறுவனத்தின் பொன் விழா நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப் பள்ளியைச் சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல எனத் தெரிவித்தார்.
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரி வளாகத்தில் ரத்தினம் கல்வி நிறுவனங்களின் 50 வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்திலிருந்து உருவான 10 பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கல்வித் துறையில் சமச்சீர் துவங்கி பல்வேறு முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. பள்ளிக் கல்வி துவங்கி உயர் கல்வி வரை வளர்ச்சிக்கான ஏற்பாடுகளை தற்போதைய அரசு செய்து வருகிறது.
தற்போதைய இளைஞர்கள் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படும் விதத்தில் உருவாகி வருகிறார்கள். இளைஞர்களின் படிப்பிற்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவது தான் திராவிட மாடல் சித்தாந்தம். உங்களுக்கான முதலமைச்சராக தற்போதைய முதல்வர் இருக்கிறார். அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. அதனை நிலைநாட்ட பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த கல்வி நிறுவனம் சிபிஎஸ்சி, மெட்ரிக் பள்ளிகள் இருப்பதாக தெரிவித்தார்கள். அரசுப் பள்ளிகளை சார்ந்த நாங்களும் சளைத்தவர்கள் அல்ல. நீங்களும் அரசுப் பள்ளியை பார்வையிடுங்கள். நாங்களும் பார்வையிடுகிறோம். உங்களிடம் இருந்து நாங்கள் சில விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். நீங்களும் எங்களிடம் இருந்து சில விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். புதிய சமுதாயத்தை படைக்க உங்களது பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்