மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமான இருந்து வருகிறது. மேலும் இம்மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் கேரள மாநில எல்லைகளுக்கு அருகே கூடலூர் பகுதி அமைந்துள்ளது. கூடலூர் அருகே அடர் வனப்பகுதிகளும், முதுமலை புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு மாடுகள், காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வனப்பகுதியில் வசிக்கின்றன.
இந்த நிலையில் முதுமலை அருகே உள்ள மசினகுடியில் இருந்து மாயாரு செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் வாகனத்தில் செல்லும் போது, பிறந்து சில வாரங்கள் மட்டுமே ஆன குட்டி ஆண் காட்டு யானை ஒன்று மரத்தின் அடியில் தனியாக கொண்டு இருப்பதை பார்த்துள்ளனர். மேலும் அந்த குட்டி யானை தனியாக சுற்றி வந்துள்ளதோடு, பதற்றத்துடன் ஓடியவாறு இருந்துள்ளது. அப்போது அருகில் வேறு எந்த காட்டு யானையும் இருக்கவில்லை. இதனால் குட்டி யானை தாயைப் பிரிந்து தனியாக சுற்றி வருவது தெரியவந்தது. இந்த காட்சிகளை சுற்றுலா பயணிகள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் இது குறித்து சுற்றுலா பயணிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
குட்டி யானை கூட்டத்துடன் சேர்ப்பு
இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை கண்காணித்தனர். மேலும் மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் வாகன போக்குவரத்திற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தையும் வனப்பணியாளர்கள் கண்காணித்து வந்தனர். யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ஆவரல்லா பீட்டிற்கு உட்பட்ட சூசுரமட்டம் பகுதியில் 2 யானைக்கூட்டங்கள் காணப்பட்டன. பிரிந்து வந்த யானை குட்டியை உடனடியாக சூசுராமட்டம் பகுதியில் உள்ள இரு யானை கூட்டங்கள் அருகே விடப்பட்டது.
நேற்றிரவு யானை குட்டியினை விடப்பட்டதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை அங்கு தென்பட்ட 3 யானை கூட்டங்களை கண்காணிக்கப்பட்டன. யானை குட்டி விடப்பட்ட இடத்திலிருந்து 500 மீ தூரத்தில் பார்க்கப்பட்ட முதல் கூட்டத்தில், நேற்றிரவு விடப்பட்ட குட்டியை ஒத்த குட்டியுடன் 3 யானைகள் இருந்தன. இரண்டாவது கூட்டத்தில் 2 யானைகள் இருந்தன. அதில் இருந்த குட்டி விடப்பட்ட குட்டியை விட சிறியது. மூன்றாவது கூட்டத்தில் 3 யானைகள் 2 குட்டிகளுடன் இருந்தன. அதில் ஒரு குட்டி விடுவிக்கப்பட்ட குட்டியின் அளவை ஒத்ததாகவும், மற்றொன்று விடுவிக்கப்பட்ட குட்டியின் அளவை விட சிறியதாகவும் இருந்தன. யானை குட்டி விடப்பட்ட இடத்திலிருந்து சுமார் 300 மீ தொலைவு வரைக்கும் யானை கூட்டங்களின் நடமாட்டத்தின் மறைமுக அறிகுறிகளும் காணப்பட்டன. இதில் இருந்து பார்க்கும் போது யானை குட்டி கூட்டத்துடன் இணைந்திருக்கும் எனவும், இருப்பினும் 3 குழுக்கள் தனி தனியாக யானைக்குட்டி நடமாட்டம் உள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். குட்டி யானையை அந்த கூட்டம் சேர்த்து கொண்டதா அல்லது தனித்து விடுகிறதா என்பதையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.