நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சாய்பாபா காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவி வரவேற்பளித்தனர். மேலும் அங்கிருந்த இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், ”இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எனக்கு மக்களாகிய உங்களை நம்பி தான் வாய்ப்பு அளித்துள்ளனர். திமுக இவர்களின் பாதுகாவலர் அவர்களின் பாதுகாவலர் என்றெல்லாம் கூறுவார்கள், ஆனால் அவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதிமுக மக்களுக்கான இயக்கம். கொரோனா காலத்தில் எந்தவித கட்சி பேரமும் பாராமல் அனைவருக்கும் உதவிய இயக்கம் அதிமுக தான்.




இதுதான் தமிழ்நாடு


எம்ஜிஆர், ஜெயலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழியில் ஜாதி மத பேதமின்றி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும், இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்று உழைக்கின்ற இயக்கம் அதிமுக. நோன்பு கஞ்சிக்கு வழங்கப்பட கூடிய அரிசியை கொடுத்து உதவியது ஜெயலலிதா. அதனை மேலும் உயர்த்தி வழங்கியது எடப்பாடியார். சிறு வயதில் இருந்தே அனைவரும் மனித நேயத்துடன் தான் பழகி வருகிறோம். ரம்ஜானுக்கு இஸ்லாமியர்கள் பிரியாணி கொடுப்பார்கள், கிறிஸ்துமஸ்க்கு கிறிஸ்துவர்கள் கேக் கொடுப்பார்கள், தீபாவளிக்கு இந்துக்கள் இனிப்புகள் கொடுப்பார்கள், தமிழர் திருநாளான பொங்கலை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம். அப்படிப்பட்ட நாடு தமிழ்நாடு. அப்படிப்பட்ட ஊர் கோயமுத்தூர். மத நல்லிணக்கம் உடைய, சகோதர சகோதரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மண் தமிழக மண். அதில் சில பெருச்சாளிகள் உள்ளே புகுந்து தில்லுமுல்லு வேலைகள் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் சம்மட்டி அடி வாங்குவது உறுதி உறுதி உறுதி. மதவாத கட்சியான பாஜகவும் வேண்டாம், குடும்ப கட்சியான திமுகவும் வேண்டாம். மக்களுக்கான இயக்கமான அதிமுக வேட்பாளரான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.


திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு


இதேபோல திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக செய்த சாதனைகள், மக்களுக்கு கொடுத்த திட்டங்களை கூறி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் 10 ஆண்டுகளாக நம்மை ஆண்ட பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வந்துள்ளது. கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை எல்லாம் இரட்டிப்பாகிவிட்டது. மோடி அரசாங்கம் ஜிஎஸ்டி என்ற வரியை விதித்ததால், இங்குள்ள தொழிற்சாலைகள் எல்லாமே நசிந்துவிட்டன. மான்செஸ்டர் ஆஃப் கோயம்புத்தூர் என அழைக்கப்பட்ட கோவையில் சிறு தொழிற்சாலைகள் எல்லாம் நசிந்து விட்டன.




நமது பொருளாதாரமே பணப்புழக்கம் இல்லாத பொருளாதாரமாக மாறிவிட்டது. அதற்குக் காரணம் ஜிஎஸ்டி. வாக்கு கேட்டு வரும் பாஜகவினர் ஜிஎஸ்டியை குறைப்பேன் அல்லது நீக்குவேன் என கூறுவர்களா? கண்டிப்பாக கூற மாட்டார்கள். இந்த பகுதியின் குறைகள் அனைத்தும் தனக்குத் தெரியும். இந்த பிரச்சனைகளை எல்லாம் பேசி வாதாடி சரி செய்து தர எங்களால் தான் முடியும். பாஜக வேட்பாளர் வெளியூரை சேர்ந்தவர், அவருக்கு நம்மைப் பற்றி என்ன தெரியும்? நம்முடைய மக்களின் குறை பற்றி தெரியாது. இங்குள்ள பிரச்சினைகளுக்கு காரணமே அவர்கள் தான். அதை எப்படி அவர்கள் சரி செய்து தருவார்கள்?” எனத் தெரிவித்தார்.