கோயம்புத்தூரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “திமுக அரசாங்கத்தில் எந்த மக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. கோவை, திருப்பூர் பகுதிகளில் ஜவுளித் துறையை நம்பி பல லட்சம் மக்கள் உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை உயர்த்தி ஒட்டுமொத்த தொழிலையும் நலிவடைந்த சூழலுக்கு கொண்டு வந்துள்ளனர். இதற்கு காரணம் திமுகவின் மின்சார கட்டண உயர்வு. சிறு குறு தொழிற்சாலைகள் மட்டுமின்றி, வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அது பொதுமக்களை பெரும் அளவு பாதித்துள்ளது.


மின்சார கட்டணத்தின் மூலம் கொள்ளை அடிக்கும் அரசாங்கமாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகள் உள்ள தொழிற்சாலைகள் ஸ்தம்பித்துள்ளன. இதற்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதற்கு தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலியில் தலித் மக்களின் மேல் சிறுநீர் கழிக்கப்பட்ட வன்கொடுமை சம்பவம் நடந்துள்ளது. வேங்கைவயல் விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், இது போன்ற சம்பவங்கள் இப்போது நடந்திருக்கிறது. திருநெல்வேலியில் பள்ளி மாணவர்கள் தாக்கப்பட்டார்கள், சேலத்தில் திமுகவினர் தலித் மக்களை தாக்கினார். அப்போதும் நடவடிக்கை இல்லை.


திமுக அரசு தலித் மக்களை வஞ்சிக்காமல் அவர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் கொல்லப்படுகின்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். திமுகவின் தொழில் கொள்கை தோல்வியுற்ற கொள்கை ஆகும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வாக உள்ளது. இது தொழில் துறையினர் தமிழகம் நோக்கி வருவதை தடுக்கிறது. இவ்வாறு தொழில்துறையினர் ஊக்கப்படுத்துவதில் தமிழக அரசு தவறி உள்ளது.


மின்சார கட்டணம் உயர்வு விவகாரத்தில் மத்திய அரசின் மீது குறை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது. மின்கட்டணத்தை மாநில மின்சாரத்துறை அமைச்சர் தான் நிர்ணயம் செய்கிறார். ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழக அரசாங்கம் உறுப்பினராக உள்ளது. மாத மாதம் நடக்கும் கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்று கருத்துக்களை தெரிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் ஜிஎஸ்டி கவுன்சில் மாநில அரசுகளை ஆலோசித்து பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. திமுக அரசு பாஜக நிர்வாகிகளை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பாஜக எப்பொழுதும் அஞ்சப்போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


பெட்ரோல் விலை, டீசல் விலை குறைப்பு குறித்து திமுக தேர்தல் வாக்குறுதிகள் கூறியதை நிறைவேற்றவில்லை. வீடுகளுக்கு மூன்று சதவீதம் கட்டணம் உயர்த்தியுள்ளது. அதை குறைக்க வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கையாக உள்ளது. ஆளுநர் என்பவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உச்ச நிலையில் இருப்பவர். ஆளுநர் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அவருடைய அலுவலகத்தில் பாதுகாப்பாற்ற சூழல் உள்ளது. இதை மூடி மறைக்கின்றனர். இதன் பின்னணி யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.