கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.  கோவை மாநகர மாவட்ட பாஜகவினர் சார்பில் விமான நிலையத்தில் மத்திய அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


தமிழக எம்.பி.க்கள்:


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ”தேசத்தின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பதவியேற்று, அவரது உரையோடு நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பாக நடந்து முடிந்தது. பதவியேற்பின் போது தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் தான் பதவி ஏற்றிருக்க வேண்டும். இதை கடைபிடிக்காத தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மக்களவை சபாநாயகர் குழு அமைத்து உள்ளார். இக்குழுவின் விசாரணையின் படி இதில் நடவடிக்கை எடுக்கப்படும்.


கள்ளக்குறிச்சிக்கு ஏன் வரவில்லை?


ராகுல் காந்தி ஹதராசுக்கு சென்றுள்ளார். ஆனால், கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்ட கள்ளக்குறிச்சிக்கு அவர் ஏன் வரவில்லை? தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சிக்கு வந்து மக்களை சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்திக்கும், மல்லிகார்ஜுனவிற்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் வழி தெரியவில்லை. இந்த விஷயத்தில் அரசியல் செய்து இரட்டை நிலைப்பாடு எடுக்கக் கூடாது. கள்ளக்குறிச்சிக்கு ராகுல் வரவேண்டும்.


தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தலைவர்களும் பங்கேற்ற பொதுக்கூட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று மிகப்பெரிய உத்வேகத்தோடு களத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நிதி வழங்கியது குறித்து இரு தரப்பு விவாதங்கள் உள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். இதை உயர்நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது.


இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்:


கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழித்து, தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் காப்பாற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருட்கள் புழக்கம், டாஸ்மாக் கடை எண்ணிக்கை ஆகியவற்றை குறைக்க வேண்டும். மாறாக டாஸ்மாக் கடைகளை அதிகப்படுத்தியுள்ளனர். மாணவர்களுக்கு தேவையான யோகா கல்வி உள்ளிட்ட நல்ல கல்வி ஆகியவற்றை கொடுக்க வேண்டும். பாஜக தலைவர்களின் செயல்பாடுகளால் பாஜக மிகப் பெரும் வகையில் வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது.


எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு எங்களது தலைவர் பதிலளித்துள்ளார். புதிய சட்டங்கள் தமிழிலும் மொழியாக்கம் செய்து வெளியிடப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாராபுரம் தொகுதியில் நான் போட்டியிட்டபோது தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல, பழனியில் இருந்து தாராபுரம் வழியாக ஈரோடுக்கு ரயில் பாதை கொண்டு வரும் என சொன்னேன். உடனடியாக அடுத்த பட்ஜெட்டில் அதனை அறிவித்துள்ளோம்.


இரட்டை இரயில் பாதை


அதேபோல் மேட்டுப்பாளையம் ரயில்வே நிலைய மேம்பாட்டிற்காக 50 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்வதற்கு, வியாபாரிகள் மாணவர்கள் வருவதற்கு, ஏற்கனவே இருக்கும் ரயில் பாதையை இரட்டை இரயில் பாதையாக மாற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை நாம் தேர்தல் வாக்குறுதியாக வழங்கினோம். அதனை நேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அவர்களை சந்தித்து, மக்களின் கோரிக்கையை கொடுத்துள்ளோம். உடனடியாக ஆய்வு செய்து இரட்டைப்பாதையாக அமைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.