கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் திமுக செய்தி தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மழை வெள்ளத்தால் சுமார் 32 இலட்சம் குடும்பங்கள் பாதித்தக்கப்பட்ட போது வராத பிரதமர், தேர்தலுக்காக 5 முறை வந்துள்ளார். பிரதமராக மோடி பதவியேற்ற போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கேஸ் சிலிண்டர் மானியம், விவசாய உர மானியம் பெட்ரோல், டீசல் மானியம் தரவில்லை. பெட்ரோல், டீசல் மானியத்தை நிறுத்தியதால் ஆண்டுக்கு 8 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் ஒன்றிய அரசிற்கு வருகிறது. எல்லா விலையேற்றத்திற்கும் காரணம் மோடி அரசு தான்.


சர்க்கரை, மண்ணெண்ணெய் மானியத்தை நிறுத்தி விட்டார்கள். பயிர் காப்பீடு, வீடு கட்டும் திட்டத்திற்கு அதிக நிதியை மாநில அரசு தான் தருகிறது. பிறகு எப்படி அண்ணாமலை சொல்வது போல மோடி பெயரை வைக்க முடியும்? ஒன்றிய அரசு தமிழகத்திற்கு எதுவும் தரவில்லை. பாஜகவிற்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்மந்தம்?மதத்தின் பெயர், கோவில் பெயரை சொன்னால் தான் வாக்களிப்பார்கள் என்பதால் மதத்தை பற்றி பேசுகிறார்கள். மதத்திற்காக கட்சி நடத்தும் ஒரே கட்சி பாஜக தான். இந்து மக்களை திமுக அரசு புறக்கணிக்கவில்லை. இந்துக்களுக்கு மோடி அப்பாவோ, அம்மாவோ, சொந்தமோ அல்ல. மோடி ஆட்சி முடிய 60 நாட்கள் தான் இருக்கிறது.




ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு முறையாக பங்கி தருவதில்லை. ஒன்றிய அரசு நிதி தராததால் தான் மக்கள் நலத்திட்டங்கள் செய்ய பணம் பற்றாக்குறை உள்ளது. அதனால் தான் கடன் வாங்கி மக்களுக்கு செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாடு 100 ரூபாய் வரி தந்தால், 29 ரூபாய் தான் திரும்ப தருகிறார்கள். மழை வெள்ள பாதிப்பிற்கு ஒரு பைசா கூட தர ஒன்றிய அரசை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். அண்ணாமலை எப்போதும் பொய் தான் பேசுகிறார். அவருக்கு திமுக பற்றி பேச எந்தவொரு தகுதியும் இல்லை. அதிமுக ஆட்சியில் அமைச்சர், காவல் துறை அதிகாரிகள் மீதே குட்கா வழக்கில் விசாரணை நடைபெற்றது. ஆட்சியில் இருந்த போது போதைப்பொருளை தடுக்க தவறிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை விமர்சிக்க தகுதியில்லை.


மக்களையும், நாட்டையும் பாதுகாக்காமல் எந்த கவலையும் இல்லாமல் மோடி வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார். விஷ்வ கர்மா திட்டம் மூலம் குல தொழிலை செய்ய சொல்லும் பிரதமர் மோடி நமக்கு தேவையா? கோவைக்கு எந்த திட்டமும் செய்யவில்லை என எஸ்.பி.வேலுமணி சொல்கிறார். திமுக செய்த சாதனை குறித்து  வேலுமணி உடன் விவாதிக்க தயார். வேலுமணி லஞ்சம் வாங்கியதை நிரூபிக்க தயார். அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றது. கொள்ளை கூட்ட கும்பல் போல அதிமுக ஆட்சி நடத்தியது. போதை பொருள் கடத்தலுக்கும், முதல்வருக்கும் என்ன சம்பந்தம்? குட்கா விற்க டிஜிபி பணம் வாங்கியது அதிமுக ஆட்சியில் தான் நடந்தது. அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லட்டும்.


ஒன்றிய அரசிற்கு தெரியாமல் போதைப்பொருள் வர முடியுமா? இது பற்றி பேச பாஜகவிற்கு யோக்கியதை இல்லை. பாஜகவில் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் தான். முதல்வர் தந்த திட்டங்களால் அதிமுகவினரின் மனைவிகளே திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். முதல்வர் தவறு செய்தவருக்கு ஆதரவு தரவில்லை. யார் தவறு செய்தாலும் முதல்வர் தண்டிப்பார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை. கோடநாடு வழக்கில் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தொழிலே ஏமாற்றுவது, துரோகம் செய்வது தான். அவர் ஓட்டுக்காக ஆள் வைத்து கொலை செய்து விட்டு அழுது நாடகமாடி ஓட்டு வாங்குபவர். துரோகத்தின் சின்னம் எடப்பாடி பழனிசாமி தான். தேர்தலில் போட்டியிட நானாக சீட் கேட்கமாட்டேன்” எனத் தெரிவித்தார்.