தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் கொரோனா பரவலை கட்டுக்குள கொண்டு வருவதற்காக கடந்த 24-ந் தேதி முதல் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


இந்த ஊரடங்கின் பயனாக, 36 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக படிப்படியாக குறையத் தொடங்கியது. இன்று 34 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த வாரம் 6 ஆயிரம் பேர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த சென்னையில் இன்று 2 ஆயிரம் என்ற அளவிலே பாதிப்பு பதிவாகியுள்ளது.




தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராமல் உள்ளது. கோவையில் முதல் முறையாக நேற்று சென்னையை விட அதிக பாதிப்பு பதிவானது. இதனால், கோவை கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் முதல் இடத்திற்கு சென்றது.


இந்த நிலையில், கொரோனா பாதிப்பிற்கு இன்று ஒருநாள் மட்டும் கோவையில் 4 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் இன்று ஒருநாளில் 2 ஆயிரத்து 930 நபர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  கோவை மாவட்டத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட கோவை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 624 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




சென்னை மாவட்டத்தில் இன்று மட்டும் 2 ஆயிரத்து 779 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், கோவையை விட அதிகமாக சென்னையில் 79 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை முழுவதும் 43 ஆயிரத்து 624 நபர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் கோவை,  மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும். இந்த மாவட்டங்களில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவும், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு விழிப்புணர்வு செய்யவும் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.