கோவையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.


கோவையில் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ஒருநாள் பாதிப்பில் சென்னையை முந்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து அதிமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரும் மனு அளித்தனர். தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் கோவை தெற்கு வானதி சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினர்.



அப்போது கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசிகள் அதிகளவில் கோவை மக்களுக்கு போட வேண்டும். அதற்காக கூடுதல் மையங்கள் திறக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதேபோன்று ஊரடங்கு அறிவிப்பால் அத்தியாவசிய பொருட்கள்  பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளிலே மக்களுக்கு  காய்கறிகள் வண்டிகள் செல்வதற்கு மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று அம்மா உணவகத்தை அதிமுக ஏற்று நடத்த அனுமதி அளிக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை ஆட்சியரிடம் வழங்கினர்.


இதையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகமாக உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் மனு அளித்துள்ளோம். கொரொனா பரவலைத் தடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க. வேண்டும். அதேபோன்று மின் மயானத்தில் சடலங்கள் எரிக்க இடம் இல்லாமல் உள்ளது. இதற்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. ஆக்சிசன் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். கூடுதல் மருத்துவப் பரிசோதனை நடத்தவேண்டும். இந்த சூழலில் மக்களை காப்பாற்றுவது தான் முக்கியம். அதை ஆளும் கட்சிக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம். கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்றிக்கான  மருந்து சிங்கப்பூரில் இருந்து கொண்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  அதிமுகவினரை பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய அனுமதி அளிப்பதில்லை. நாங்கள் அனுமதி கேட்கும் இடத்தில்  இருக்கிறோம். பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கசென்றால் காவல்துறை வழக்கு பதிவு செய்வதாக எச்சரிக்கை விடுக்கின்றனர்.



கோவை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்புப் பணிகளுக்காக இரண்டு அமைச்சர்கள் நியமனம் செய்து ஆலோசனை கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டுகிறோம். அதே சமயம் தொற்று பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தால்தான் கொரோனா தொற்று குறையும். கோவையில் அதிமுக சட்டமன்ற தெர்தலில் வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாகுபாடு பார்ப்பதில்லை” என அவர் தெரிவித்தார்.