தென் மேற்கு பருவ மழை காரணமாக, கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. கோவை குற்றாலம், கவியருவி ஆகிய அருவிகளில் வெள்ள பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாலக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, வால்பாறையை அடுத்த கேரளா மாநிலத்திற்குள் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதன் காரணமாக அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கேரள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் அதிரப்பள்ளியில், வெள்ளியை உருக்கி ஊற்றியது போல வெண்மை நிற நீரோடை பேரிச்சலோடு கொட்டும். 24 மீட்டர் உயரத்தில் இருந்து நதி நீர் கீழே விழும். அருவியில் குளிக்க வாய்ப்பில்லை என்றாலும், மேல் பகுதியில் சாலக்குடி ஆற்றில் குளித்து மகிழலாம். இதனால் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரிய நீர் வீழ்ச்சியாக இருந்து வருகிறது. பாகுபலி, ராவணன் உள்ளிட்ட திரைப்படங்களில் பார்த்து வியந்த அருவிகளை, நேரில் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு புன்னகை மன்னன் படம் எடுக்கப்பட்டதால், இந்த அருவிக்கு புன்னகை மன்னன் பால்ஸ் என அழைக்கப்படுவதும் உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்கள் பலவற்றில், அசர வைக்கும் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியை காட்சிப்படுத்தியுள்ளனர். இவ்விடம் சினிமா படப்பிடிப்புக்கான சொர்க்கபுரியாக விளங்குகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்த வால்பாறை பகுதி வழியாக இந்த நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிகள், எதிர்படும் வனவிலங்குகள், தேயிலைத் தோட்டங்கள், சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வழியாக கேரள மாநில எல்லையில் உள்ள மலக்கபாறாவில் இருந்து அதிரப்பள்ளிக்கு 50 கிலோ மீட்டர் தூர வனச் சாலை வழியாக அதிரப்பள்ளி செல்வது சிறப்பான பயண அனுபவத்தை தருவதாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்