உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஆண்டுதோறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நடப்பாண்டு காசி தமிழ் சங்கமம் விழாவிற்காக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது. இந்த வகையில், கோவை - பனாரஸ் காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் (06187) நாளை (16 ஆம் தேதி) இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில், பனாரஸ்- கோவை காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் (06188) வரும் 21 ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.


இந்த சிறப்பு ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படும். இந்த கோவை - பனாரஸ் காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலின் இரு மார்க்க இயக்கத்திலும், மூன்றடுக்கு ஏசி பெட்டி- 6, மூன்றடுக்கு ஏசி எக்னாமி பெட்டி- 3, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி- 7, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி - 1, லக்கேஜ் பெட்டி - 1 என 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் பயணிக்க மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு ஏற்பட்டதால், அனைத்து முன்பதிவு இருக்கைகளும் நிரம்பிவிட்டன. இதனால், கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, கோவை - பனாரஸ் காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில், இரு மார்க்க இயக்கத்திலும் கூடுதலாக மூன்றடுக்கு ஏசி பெட்டிகள்- 3, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி- 1 என 4 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. நாளைய தினம் கோவையில் புறப்படும் போது, 22 பெட்டிகளுடன் இந்த ரயில் இயங்கவுள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.