கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி வீட்டில் கர்நாடகா மாநில காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவையில் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பொங்கலூர் பழனிசாமி இருந்து வருகிறார். சட்டமன்ற உறுப்பினராகவும், திமுக அமைச்சராகவும் பதவி வகித்துள்ள இவர், தற்போது திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் பைந்தமிழ் பாரி திமுக விளையாட்டு அணி மாநில துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். கடந்த 2006 முதல் 2011 ம் ஆண்டில் இவர் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.  மேலும் பைந்தமிழ் பாரி கர்நாடக மாநிலத்தில் கல் குவாரிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த லோக் ஆயுக்தா காவல் துறையினர் பைந்தமிழ் பாரி வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணா காலணி பகுதியில் உள்ள பைந்தமிழ் பாரி வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டு வாகனங்களில் வந்த கர்நாடகா லோக் ஆயுக்தா காவல் துறையினர் பல மணி நேரங்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் பைந்தமிழ் பாரிக்கு சொந்தமான  கல் குவாரிகள் உள்ள நிலையில், அங்கு விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகார் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திமுக முன்னாள் அமைச்சரின் மகன் வீட்டில் நடந்து வரும் இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.