நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96வார்டுகளை கைப்பற்றியது. அதில் 73 வார்டுகளில் திமுக நேரடியாக வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் 9 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 4 வார்டுகளிலும், மதிமுக 3 வார்டுகளிலும், கொமதேக 2 வார்டுகளிலும், மமக 1 வார்டிலும் வெற்றி பெற்றது. அதிமுக 3 வார்டுகளிலும், எஸ்.டி.பி. 1 வார்டிலும் வெற்றி பெற்றது. தேர்வு செய்யப்பட்ட கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்களுக்கு கடந்த 2 ம் தேதியன்று கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.


இதையடுத்து கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே திமுக சார்பில் மேயர் பதவிக்கு கல்பனா ஆனந்தகுமாரும், துணை மேயர் பதவிக்கு வெற்றி செல்வனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 3 அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேர் பங்கேற்கவில்லை. 96 பேர் ஒருமனதாக போட்டியின்றி கல்பனா ஆனந்தகுமாரை மேயராக தேர்வு செய்தனர். இதனால் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார். இதேபோல திமுகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.




இதையடுத்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மேயராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை கல்பனா ஆனந்தகுமாரிடம் வழங்கினார். இதையடுத்து கல்பனா ஆனந்தகுமார் மேயர் அங்கி அணிந்தபடி வந்து மேயராக பொறுப்பேற்றார். அப்போது செங்கோல் ஏந்தியபடி, மேயர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்து கல்பனாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து திமுக நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கல்பனாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கல்பனா ஆனந்தகுமார். 40 வயதான இவர், கோவை மாநகராட்சி 19 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார், அப்பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார். எளிய குடும்ப பின்னணியை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் குடும்பத்தினர் 3 தலைமுறையாக திமுகவில் இருந்து வருகின்றனர். கல்பனாவின் கணவர் அப்பகுதியில் இ சேவை மையம் நடத்தி வருகிறார். மேலும் வாடகை வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.