நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் கோவையில் பல்வேறு இடங்களில் திமுக தலைமை உத்தரவை மீறி, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு திமுகவினர் போட்டியிட்டு கைப்பற்றினர். சில இடங்களில் திமுகவினர் இரு தரப்பினராக பிரிந்து போட்டியிட்ட சம்பவங்களும் நடைபெற்றது. 


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. திமுக 19, காங்கிரஸ் 2, அதிமுக மற்றும் சுயேச்சைகள் தலா 3 வார்டுகளில் வெற்றி பெற்றன. திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் கருமத்தம்பட்டி நகராட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் 25 வது வார்டில் வெற்றி பெற்ற  பாலசுப்பிரமணியம் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென  கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு 20வது வார்டில் வெற்றிப் பெற்ற திமுகவின் ஒன்றிய செயலாளர் நித்யா மனோகரன், தலைமை உத்தரவை மீறி போட்டியிட்டார்.  மறைமுக தேர்தலின் போது 22 வாக்குகள் பெற்ற நித்யா மனோகரன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பாலசுப்பிரமணியம் 5 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றியதை கண்டித்து, கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இதேபோல கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் தேர்தல் இன்று காலை நடைபெற்றது. இங்கு தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவராஜன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அறிவித்தது. இந்நிலையில் இன்று காலை திமுக நகர செயலாளர் விஷ்வ பிரகாஷ் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பு மனுத் தாக்கல் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு வந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை வேட்பு மனுத்தாக்கல் செய்யவிடாமல் திமுகவினர் ஒரு அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் திமுக நகர செயலாளர் விஸ்வபிரகாஷ் பேரூராட்சித் தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் துணையுடன் திமுகவினர் கூட்டணி தர்மத்தை மீறி பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றி இருப்பதாக குற்றம்சாட்டினர். 




இதேபோல 10 சுயேட்சைகள் வென்ற கோவை மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் பதவியை சுயேட்சைகள் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் சசிகுமார் கைப்பற்றினார். மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் 10 வார்டுகள் சுயேட்சைகளும், 5 திமுகவும் வெற்றிப் பெற்றிருந்தது. மறைமுகத் தேர்தலின் போது அப்பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான சசிக்குமார் 9 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.