கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழக வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் துவக்க விழா வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயனாளிகளிக்கு மகளிர் உரிமை தொகை திட்டத்தின் ரூபே கார்டுகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “இந்தத் திட்டத்திற்கு தமிழக முதல்வர் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு அதிகாரிகளிடம் பேசி வருகிறார். இன்று ஒரு கோடிக்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு இந்த திட்டம் சென்றடைந்து இருக்கின்றது.
மனுக்களை பெற்று ஆய்வு செய்து ஒரு பகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். விட்டுப்போனவர்கள் மேல் முறையீடு செய்யவும் முதல்வர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். பிற மாநிலங்களும் தமிழக திட்டங்களைப் பார்த்து அதை செயல்படுத்த முயல்கின்றனர். பலரின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்று முதல் பணம் சென்று கொண்டு சேர்ந்து வருகின்றது. மொத்தம் ஒரு கோடியே 6 லட்சம் பேர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். விடுபட்டவர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். மொத்தமாக வந்தவுடன் தான் புள்ளி விபரங்கள் கிடைக்கும். மாவட்ட வாரியாக தகவல் கொடுப்பதற்குச் சிறிது காலம் வேண்டும். ஒரு சில இடங்களில் பயனாளிகளின் தகவல்கள் சிலரால் கேட்கப்படுகிறது. ஈரோட்டில் அது போன்ற தகவல் வந்தது. யாரும் தகவல் கேட்டால் பயனாளிகள் சொல்ல வேண்டாம். ஏதாவது சந்தேகம் என்றால் அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பயனாளிகள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உடம்பு சரி இல்லாமல் இருப்பதாக சொன்னார்கள். அதனால் அவர் இன்றைய நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை. மருத்துவமனைக்கு போய் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். மேயர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மாறுபட்ட கருத்துகளை கொண்டவர்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது. மேயர் குறித்து திமுக கவுன்சிலர்கள் யாரும் புகார் எதுவும் எனக்கு சொல்லவில்லை. நான் பொறுப்பு அமைச்சர், பொறுப்பாக விசாரித்துவிட்டு இது குறித்து சொல்கிறேன். உடம்பு சரியில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சிக்கு வரவில்லை என கோவை மேயர் தரப்பில் சொல்லப்பட்டது. நல்ல விஷயங்களை கேளுங்கள். விமர்சனங்களை மட்டும் கேள்வியாக கேட்காதீர்கள்.
மேயர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கலாம். என்ன என்று தெரிந்து கொண்டு அடுத்த கூட்டத்தில் பதில் சொல்கின்றேன். அவுட்சோர்சிங் முறையில் இருக்கும் தூய்மை பணியாளர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் தான்” எனத் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் பணிகளுக்கு பணம் கேட்பது தொடர்பான புகார்கள் தெரிவிக்க பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புகார் எண் கொடுத்து இருப்பது குறித்த கேள்விக்கு, ”வானதி சீனிவாசன் கொடுத்துள்ள எண்ணில் ஏதாவது புகார் வந்திருக்கின்றதா? அப்படி வந்திருந்தால் எங்களுக்கு அனுப்ப சொல்லுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். எதிர்கட்சியினர் அப்படித்தான் சொல்வார்கள். பாராட்டியா பேசுவார்கள்? அவர்கள் பேசுவதை எடுத்துக்கொண்டு நேரத்தை வீணாக்க முடியாது. இந்தத் திட்டத்தை பற்றி அவர்கள் ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த திட்டத்தை கோவையில் மறைமுகமாக நடத்தவில்லை. இந்த இடம் வசதியாக இருப்பதால் தேர்வு செய்யப்பட்டது. மக்களிடம் கொண்டு போய் சேர்க்கத்தான் ஊடகங்கள் இருக்கின்றது. மிகப்பெரிய திருப்தி மக்களிடம் இருக்கின்றது. நிதித்துறை கடுமையான சூழலில் இருந்தாலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.