கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மலைத் தொடரை பூர்விகமாக கொண்டவர்கள், காடர் பழங்குடிகள். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் காடுகளை வாழ்வதாரமாக கொண்டு இயற்கையோடு இணைந்து காடர்கள் வாழ்ந்து வருகின்றனர். வால்பாறை அருகே வனப்பகுதிக்குள் கல்லார்குடி பகுதியில் 23 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் மண் சரிவினால் குடியிருப்புகள் பெரும் சேதமடைந்தன. இதையடுத்து காடர் பழங்குடிகள் மண் சரிவு ஏற்படாத இடமாக கருதிய தெப்பக்குளமேடு என்ற வனப்பகுதியில் குடியிருப்புகளை அமைத்தனர்.




புலிகள் காப்பக உள் வட்ட பகுதி என்பதை காரணம் காட்டி, அப்பகுதியில் குடியிருக்க வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த காடர் பழங்குடிகளை அப்புறப்படுத்திய வனத்துறையினர், அருகேயுள்ள தேயிலை எஸ்டேட் குடியிருப்பில்  தங்க வைத்தனர். இதனிடையே தெப்பக்குள மேட்டில் புதிதாக குடியிருப்புகளை ஏற்படுத்த வேண்டுமென கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். பின்னர் வருவாய் துறை, வனத்துறை, நில அளவைத் துறை இணைந்து தெப்பக்குளமேடு பகுதியில் புதிய கிராமத்திற்கான நில அளவீடு செய்யப்பட்டது. இதையடுத்து ஓராண்டு கடந்த நிலையிலும், காடர் பழங்குடிகளுக்கு நிலம் வழங்கப்படவில்லை. 


இதனால் கடந்த அக்டோபர் மாதம் காடர் பழங்குடிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து அரசு தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் தெப்பக்குள மேடு பகுதியில் புதிய கிராமம் அமைக்கவும், அவர்களுக்கு நிலம் ஒதுக்கவும் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தெப்பக்குள மேட்டில் 21 குடும்பங்களுக்கு ஒன்றரை செண்ட் வீதம் நிலத்திற்கான பட்டாக்களை வழங்கினார். இதனால் 2 ஆண்டு போராட்டம் வெற்றியடைந்ததால் காடர் பழங்குடிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி வனத்துறையினரின் செயலால் நிலைக்கவில்லை.




தெப்பக்குள மேடு பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கும் பணியில் காடர் பழங்குடிகள் ஈடுபட்டு வந்தனர். அப்பகுதியில் தங்களது பாரம்பரிய வழக்கப்படி குறிப்பிட்ட இடைவெளி விட்டு 4 குடிசைகள் அமைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் குடிசைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடிகள் வனத்துறையினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வனத்துறையினர் குடிசைகளை அகற்றினர்.




இது குறித்து பழங்குடியினரான அனிஷ் கூறுகையில், “கல்லார் குடி கிராமத்தை கைவிட்டு தெப்பக்குள மேட்டில் மாற்று இடம் கேட்டோம். இப்பகுதியில் சர்வே நடத்தி 15 நாட்களுக்கு முன்பு எங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அங்கு குடிசை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தோம். 2 நாட்களில் அங்கு குடியேற இருந்த நிலையில் வனத்துறையினர் அராஜகமாக ஈவு இரக்கமின்றி குடிசைகளை அப்புறப்படுத்தி உள்ளனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.




பழங்குடியின செயற்பாட்டாளர் தன்ராஜ் கூறுகையில், “பச்சைக் குழந்த கழுத்தை நெறிக்கிற மாதிரி எங்க குடிசைகளை எல்லாம் நெறிச்சி போட்டுடாங்க என காடர் பழங்குடியின பெண்கள் கதறு அழுகின்றனர். வருவாய் துறை பட்டா வழங்கிய இடத்தில் தான் பழங்குடிகள் குடியேறினர். ஆனால் வனத்துறை ஒரே வரிசையில் குடிசைகள் இல்லை எனக்கூறி, அத்துமீறி குடிசைகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளனர்.




பழங்குடிகள் மீது தவறு இருந்தால் குடிசைகளை அகற்றுமாறு நோட்டீஸ் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. புலிகள் காப்பகத்திற்குள் பல ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை இதேபோல வனத்துறையினர் அகற்றுவார்களா?. பழங்குடிகளுக்கு அரசு பட்டா வழங்கிய நிலையில், அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வனத்துறையினர் செயல்பட்டு உள்ளனர். குடிசைகளை அகற்றிய வனத்துறையினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.


ஏபிபிநாடுவிற்கு விளக்கம் அளித்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியன், ”பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட அதிகமாக இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். அதனால் குடிசைகளை வனத்துறையினர் அகற்றியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.